பதிவு செய்த நாள்
06
நவ
2021
08:11
கேதார்நாத்தில் ஆதிசங்கரர் சிலை பிரதிஷ்டைக்கு, சிருங்கேரி சாரதா பீட சங்கராச்சாரியார் ஜகத்குரு ஸ்ரீ பாரதி தீர்த்த மஹா சன்னிதானம் சார்பில், தங்க ருத்ராட்ச மாலை மற்றும் பிரதமருக்கான சிறப்பு பிரசாதம், ஆசிர்வாத கடிதம் வழங்கப்பட்டது.
உத்தரகாண்ட் மாநிலம், கேதார்நாத்தில் ஆதிசங்கரர் சிலையை நேற்று பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதை முன்னிட்டு, அவர் ஸ்தாபித்த நான்கு மடங்களான துவாரகா, புரி, பதரி, சிருங்கேரி மடங்களில் இருந்து பிரதிநிதிக அனுப்ப, உத்தரகாண்ட் சார்தாம் வாரியம் அழைப்பு விடுத்தது. இதன்படி, சிருங்கேரி சாரதா பீடத்தின் சார்பில், பண்டிட் சிவகுமார் சர்மா சென்று, ஜகத்குரு ஸ்ரீ பாரதி தீர்த்த மஹா சன்னிதானத்தின் ஆசீர்வாத கடிதத்தை வழங்கினார். மேலும், புதிய சிலைக்கு அணிவிக்க, 1,000 தங்க ருத்ராட்சங்கள் அடங்கிய மாலை மற்றும் பிரதமருக்கான சிறப்பு பிரசாதத்தை சமர்ப்பித்தார். ஆசிர்வாத கடிதத்தில், ஸ்ரீ சங்கரர் ஒரு மனிதனின், ஒரு சமூகத்தின் நன்மைக்காக வாழ்ந்தவரல்ல. முழு மனித குலத்துக்கும் நன்மை ஏற்பட, அனைவருக்கும் நல்வழியை உபதேசித்தார்.
தன் 32வது வயதில், பனி மூடிய கேதார மலையில், அவதார காரியங்களை நிறைவேற்றிய திருப்தியுடன் பகவானோடு, சங்கரர் ஐக்கியம் ஆனார். தேசம் முழுதும் யாத்திரை செய்து கணக்கற்ற மக்களை சந்தித்து, வேதம் கூறும் உண்மையின் அறிவை வெளிப்படுத்தினார். அவர் கடைசியாக சிஷ்யர்களுக்கு தரிசனம் கொடுத்த கேதாரநாத்தில், ஆதிசங்கரரின் அழகான உருவ சிலையை பிரதமர் நரேந்திர மோடி நிறுவியுள்ளது, சங்கரர் செய்த பேருதவிக்கு செய்த நன்றிக்கடனாக விளங்குகிறது என தெரிவித்துள்ளார். ஸ்ரீ பாரதி தீர்த்த மஹா சன்னிதானம் மற்றும் ஸ்ரீ விதுசேகர பாரதி சன்னிதானம் சார்பில், ஆதிசங்கரரின் வெள்ளி சிலைக்கு பட்டு, பூஜை, தீபாராதனை பொருட்களும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், கர்நாடகா வேளாண் துறை அமைச்சர் ஷோபா, பா.ஜ., தேசிய செயலர் ரவி, எம்.எல்.ஏ., பிரானேஷ், முன்னாள் எம்.எல்.ஏ., ஜீவராஜ் கலந்து கொண்டனர். சிருங்கேரி மடத்தின் முதன்மை அதிகாரி கவுரிசங்கர் ஏற்பாடுகளை செய்திருந்தார். - நமது நிருபர் -