நிலக்கோட்டை: நிலக்கோட்டை நடராஜர் கோயில் திருப்பணிகள் மீண்டும் தொடங்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்த்து உள்ளனர். நிலக்கோட்டை நடராஜர் கோயில் 1908ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இக்கோயிலின் சிறப்பு சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு அடுத்ததாக உலோகச்சிலை, உற்சவராகவும் மூலவராகவும் நடன நிலையில் அமையப் பெற்றதாகும். 2011ல் கும்பாபிஷேகத்திற்கான பணிகள் துவங்கி அடுத்த ஆண்டே நின்று போனது. மீண்டும் 2016ல் பணிகள் துவங்கியது. அப்போது உலோகச் சிலையை அகற்றி கற்சிலை வைக்க திருப்பணி குழுவினர் முயன்றனர். ஆகம விதிகளின்படி இக்கோயிலில் உலோகச் சிலை மட்டுமே வைக்க வேண்டும். திருப்பணிக் குழுவினர் கற்சிலை வைக்க முயன்றதால் திருப்பணிகள் நிறுத்தப்பட்டன. புதிய அரசு கோயில் திருப்பணிகளைச் செய்வதில் முனைப்பு காட்டி வருகிறது. இக்கோயிலின் திருப்பணிகளை துவக்கி கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை பக்தர்கள் எழுப்பியுள்ளனர்.