பொங்கலூர்: அலகு மலையில் கந்தர் சஷ்டி விழா துவங்கியது. சூரசம்காரம், திருக்கல்யாணம் ரத்து செய்யப்பட்டுள்ளது முருக பக்தர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
பொங்கலூர் அலகு மலையில் உள்ள முருகப் பெருமான் பால தண்டாயுதபாணியாக காட்சியளிக்கிறார். நேற்று முன்தினம் கந்தர் சஷ்டி விழா துவங்கியது. இதை முன்னிட்டு பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவங்கினர். அபிஷேகம், ஆராதனை நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு கந்தர் சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் ஆகியவை நடக்காது. இது முருக பக்தர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து முருக பக்தர்கள் கூறுகையில், கொரோனாவை காரணம்காட்டி இரண்டாவது ஆண்டாக இந்த ஆண்டும் கந்தர் சஷ்டி விழா தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஊர்தோறும் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. கோயில் விழாவை விட மதுக்கடைகளில் அதிக கூட்டம் கூடுகிறது. ஆனால், அரசு இரட்டை வேடம் போடுகிறது என்றனர்.