மூணாறு: சபரிமலைக்கு புல்மேடு வழியாக பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை, என, இடுக்கி கலெக்டர் ஷீபா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகர விளக்கு சீசன் நெருங்குவதால் முன்னேற்பாடு குறித்து ஆலோசனை கூட்டம், இடுக்கி கலெக்டர் ஷீபா தலைமையில் நேற்று நடந்தது. அனைத்து துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கலெக்டர் கூறியதாவது: சபரிமலைக்கு புல்மேடு வழியாக செல்ல பக்தர்களுக்கு அனுமதியில்லை. மண் சரிவு ஏற்பட்ட ரோடுகளில் ஒரு வழி பாதையாக போக்குவரத்து அனுமதிக்கப்படும். உணவு பொருட்களின் தரம், விலை, எடை சரிபார்க்க மாவட்ட வழங்கல், உணவுப் பாதுகாப்பு துறை சார்பில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படும். ரோடுகளில் ஆபத்தான பகுதிகளில் முன்னெச்சரிக்கை போர்டுகள் வைக்க ஏற்பாடு செய்யப்படும். பக்தர்களுக்கு உதவ போலீஸ் உதவி மையங்கள் செயல்படும். இவ்வாறு அவர் கூறினார்.