பதிவு செய்த நாள்
08
நவ
2021
02:11
பல்லடம்: பல்லடம் அருகே, அய்யன் கோவிலில் மழைநீர் கசிவை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த அய்யன் கோவில், 300 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது. சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பல்வேறு பகுதி கிராம மக்களும் இக்கோவிலில் வந்து வழிபட்டு செல்கின்றனர். இக்கோவில், அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. தொற்று பரவல் காரணமாக, நீண்ட நாட்களுக்குப் பின், கோவில் திறக்கப்பட்டு, பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனிடையே, தொடர்ந்து பெய்து வரும் பருவ மழை காரணமாக, கோவில் கருவறையின் மேற்கூரையில் இருந்து தண்ணீர் கசிந்து வருகிறது.
பக்தர்கள் கூறுகையில், கோவில் கருவறையின் மேற்கூரையில் மழைநீர் தேங்கி இருக்க வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக, தேங்கி நிற்கும் தண்ணீர் கசிந்து, கோவில் வளாகத்தில் விழுகின்றது. இது பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதுடன், கோவில் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படும் என்பதால், தண்ணீர் கசிவை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கோவில் சுவற்றில் அரச மரம் வளர்ந்து வருவதால், சுவர் விரிசல் விடும் வாய்ப்பு உள்ளது. எனவே, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் கோவிலை பராமரிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.