பதிவு செய்த நாள்
10
நவ
2021
02:11
பெரம்பலுார்: சிறுவாச்சூரில் தொடர்ந்து மூன்றாவது முறையாக சுவாமி சிலைகள் மர்ம நபர்களால் உடைத்து சேதப்படுத்தப்பட்ட நிலையில் இதை தடுக்க வேண்டிய போலீசும், அறநிலைத்துறையும் கும்பகர்ண துாக்கத்தில் உள்ளதாக பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பெரம்பலுார் மாவட்டம், சிறுவாச்சூர் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் துணை கோவிலான பெரியசாமி கோவில் சிறுவாச்சூர் அருகே பெரியசாமி மலையில் உள்ளது. இந்நிலையில், கடந்த அக்., 6ம் தேதி பெரியசாமி கோவில் 10 அடி உயரமுள்ள பெரியசாமி சிலை உட்பட 9 சிலைகளும், செங்கமலையார் கோவிலில் கன்னிமார்கள் சிலை என 5 என சுட்ட மண்ணால் செய்யப்பட்ட மொத்தம் 14 சிலைகள் மர்ம நபர்களால் உடைத்து சேதப்படுத்தப்பட்டன.
இது குறித்து, பெரம்பலுார் போலீசார் வழக்கு பதிந்து, சென்னையைச் சேர்ந்த நாதன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சுவாமி சிலைகளுக்கு அடியில் பதிக்கப்பட்டிருக்கும் எந்திரத்தை எடுத்து வைத்துக் கொண்டால் அதிக நன்மைகள் கிடைக்கும் என்ற எண்ணத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதாக அவர் கூறியதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், அவர் தனக்கும் சிலை உடைப்புக்கும் சம்பந்தமில்லை என்று தெரிவித்தார். இதன் பின்னர் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சில நாட்களுக்கு பின் ஜாமினில் அவர் வெளியில் வந்த நிலையில், அக்., 27ம் தேதி மீண்டும் பெரியசாமி கோவில் 15 அடி உயரமுள்ள பெரியசாமி சிலை உட்பட 5 சிலைகளும், செங்கமலையார் கோவிலில் 15 அடி உயரமுள்ள செங்கமலையார் சிலை உட்பட 13 சிலைகள் என சுட்ட மண்ணால் செய்யப்பட்ட மொத்தம் 18 சிலைகள் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டன.
இதை கண்டித்து, இந்து முன்னணி, பாஜக உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் மறியல், முற்றுகை போராட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தினர். இதை தொடர்ந்து கோவில்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. அழகுராஜா,38, சிவக்குமார், 38, ஆகிய இருவர் காவலர்களாக அறநிலையத்துறை சார்பில் நியமிக்கப்பட்டனர். போலீசாரும் அவ்வப்போது இப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இப்பகுதியில் மழை பெய்து கொண்டிருந்ததால் இரவு காவலர்கள் இருவரும் பணிக்கு செல்லவில்லை எனவும், போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபடவில்லை எனவும் கூறப்படுகிறது. இதையறிந்த, மர்ம நபர்கள் மூன்றாவது முறையாக பெரியசாமி கோவிலில் 15 அடி உயரமுள்ள குதிரை சிலை, ஆத்தடி சித்தர் கோவிலில் 3 அடி உயரமுள்ள நாககன்னி சிலை உட்பட இரண்டு சிலைகளும், பெருமாள் கோவிலில் 5 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் சிலை செங்கமலயார் கோவிலில் 15 அடி உயரமுள்ள பொன்னுசாமி சிலை உட்பட சுட்ட மண்ணால் செய்யப்பட்ட மொத்தம் 9 சிலைகளும் மர்ம நபர்கள் உடைக்கப்பட்டன.
நேற்று காலையில் காவலர்கள் அழகுராஜா, சிவகுமார் ஆகியோர் சென்று பார்த்தபோது கோவிலில் சுவாமி சிலை உடைக்கப்பட்டது தெரியவந்தது. இது குறித்து, பெரம்பலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். மழையால் சிக்னல் கிடைக்காததால் கண்காணிப்பு கேமரா செயல்படவில்லை என்றும், இது சரியானதும் பதிவுகளை ஆய்வு செய்தால் குற்றவாளி யார் என்பது தெரியவரும் என்று கூறப்படுகிறது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மேற்கண்ட கோவில்களில் தொடர்ந்து மூன்று முறை யாக மர்ம நபர்களால் சாமி சிலைகள் உடைத்து சேதப்படுத்தியுள்ள நிலையில் இதை தடுக்க வேண்டிய இந்து சமய அறநிலை துறை அதிகாரிகளும், மாவட்ட போலீஸ் கும்பகோணத்தில் உள்ளதாக குற்றம் சாட்டுவதுடன், இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.