பதிவு செய்த நாள்
11
நவ
2021
11:11
திருவண்ணாமலை:திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் தீப திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா நேற்று துவங்கியது. அதிகாலை, 3:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவர் அருணாசலேஸ்வரர், உண்ணாமுலை அம்மன் மற்றும் உற்சவர் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன.தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க, 63 அடி உயர தங்க கொடி மரத்தில் காலை, 6:30 முதல், 6:40 மணிக்கு விருச்சிக லக்னத்தில் கொடியேற்றம் நடந்தது.
தொடர்ந்து, 10 நாட்கள் நடக்கும் விழாவில் பஞ்ச மூர்த்திகள், காலை, மாலை என, இரு வேளைகளிலும் கோவிலில் ஐந்தாம் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். வரும் 19ல் அதிகாலை 4:00 மணிக்கு கோவில் கருவறை எதிரில் பரணி தீபம்; மாலை 6:00 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது.வரும் 16ல் நடக்கும் பஞ்ச மூர்த்திகள் மஹா ரத ஓட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 17 முதல் 20 வரை, பவுர்ணமி மற்றும் மஹா தீபத்தன்று கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மலை மீது ஏறி, மஹா தீபம் தரிசனம் காணவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.கொப்பரைக்கு பூஜைமஹா தீபம் ஏற்றுவதற்காக, கோவையைச் சேர்ந்த பக்தர் ஒருவர் நேர்த்தி கடனாக பஞ்ச லோகத்தில் செய்யப்பட்ட, இரண்டு புதிய கொப்பரைகளை, நேற்று கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தார்.இவை, ஐந்தே முக்கால் அடி உயரத்துடன், வெப்பத்தால் பாதிக்காத வகையில், 130 கிலோ எடையில், கால் அங்குல தடிமனுடன் பஞ்சலோக தகட்டில் செய்யப்பட்டுள்ளன.
மலை உச்சிக்கு எடுத்து செல்ல வசதியாக, மேல் மற்றும் கீழ் பாகங்களில் தலா நான்கு வளையங்கள் பொருத்தப்பட்டுள்ளன.காவி நிற வண்ணம் பூசப்பட்டு, மேல் பாகத்தில் சிவ சிவ என்ற வாசகம் எழுதப்பட்டு, விபூதி பட்டையுடன் கூடிய லிங்கம் படமும், கீழ்பாகத்தில் தீப விளக்கு எரிவது போல் படத்துடன், மஹா தீபம் என எழுதப்பட்டுள்ளது. இரண்டு கொப்பரைகளுக்கும் நேற்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
கட்டுப்பாடுகளை நீக்க கோரிக்கை: விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில தலைவர் சக்திவேல், மாவட்ட தலைவர் ராஜேந்திரன், ஹிந்து முன்னணி மாவட்ட பொருளாளர் அருண்குமார், ஆர்.எஸ்.எஸ்., கோட்ட பொருளாளர் ராஜசேகர் ஆகியோர், நேற்று தீப திருவிழாவில் பக்தர்களுக்கு செய்யப்பட்டு உள்ள முன்னேற்பாடுகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தினர். பின், நிருபர்களிடம் அவர்கள் கூறியதாவது: அருணாசலேஸ்வரர் கோவிலுக்குள் செல்ல, உள்ளூர் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி அட்டையில் முறைகேடு நடந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தீபத் திருவிழா குறித்து, பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும். ஆனால், இந்தாண்டு நடத்தப்படவில்லை.உள்ளூர் பக்தர்கள் கோவிலுக்கு சென்று வர, நான்கு கோபுர நுழைவு வாயில்களில் ஏதாவது ஒரு கோபுரம் வழியாக அனுமதிக்க வேண்டும். இது பொதுமக்களுக்கான திருவிழா, அதிகாரிகளுக்கான விழா கிடையாது. ஆன்லைன் வாயிலாக வழங்கப்படும் டிக்கெட்டில், அருணாசலேஸ்வரர் படம் இடம் பெற வில்லை. நகர் பகுதிக்கு வெளியே பஸ்கள் நிறுத்தப்படுவதாக, மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி, இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். உள்ளூர் பக்தர்கள் அதிகம் பேர் தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.