சூலூர்: இருகூர் பண்ணாரி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். இருகூர் - ஒண்டிப்புதூர் ரோட்டில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவில் பழமையானது. இங்கு, பல்வேறு திருப்பணிகள் முடிவுற்று, கடந்த, 9 ம்தேதி மாலை விநாயகர் வழிபாட்டுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. நேற்று முன்தினம் இரு கால ஹோமம் நடந்தது. நேற்று காலை, மூன்றாம் கால ஹோமம் முடிந்து, புனித நீர் கலசங்கள் மேள, தாளத்துடன் கோவிலை வலம் வந்தன. காலை, 8:00 மணிக்கு விமானம் மற்றும் பண்ணாரி மாரியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. காமாட்சி புரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார்.தொடர்ந்து மகா அபிஷேக, அலங்கார பூஜைகள் மற்றும் அன்னதானம் நடந்தது. முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.