தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் அமைந்திருக்கிறது இந்திரனுக்கான கோயில். இந்து மதத்தில் மட்டுமல்ல புத்த மதம் மற்றும் சமண மதங்களில் கூட இந்திரனுக்குத் தனி இடம் உண்டு. இந்திரனின் உத்தரவின் பேரில்தான் தேவசிற்பியான விஸ்வகர்மா பாங்காக் நகரையே படைத்தான் என்று அவர்கள் நம்புகிறார்கள் இதன் காரணமாகவே அதை ‘சாக்க தத்திய விட்சனுகம் ப்ராஸிட்’ என்கிறார்கள்.(தாய் நாட்டின் மொழியில் சாக்கா என்பது இந்திரனையும் விட்சனுகம் என்பது விஸ்வகர்மாவையும் குறிக்கின்றன. தத்திய என்றால் உத்தரவு. ப்ராஸிட் என்றால் உருவாக்கம்). பாங்காக் நகரில் பிரபல பிரம்மன் கோயில் அமைந்துள்ள அதே சாலையில் இந்திரனுக்கான கோயிலும் அமைந்துள்ளது. அளவில் பெரிதாகக் காட்சிதருகிறார் இந்திரன். ஒருவித பச்சை வண்ணத்தில் உருவாக்கப்பட்டு இருக்கிறார். நான்கு கரங்கள் கொண்டவராக தோற்றமளிக்கிறார். சக்கரம், வஜ்ராயுதம், திரிசூலம் ஆகியவற்றைத் தாங்கி அமர்ந்த நிலையில் காட்சி அளிக்கிறார். மூன்று தலைகள் கொண்ட வெள்ளை யானையான ஐராவதத்தின் மீது அமர்ந்திருக்கிறார். இந்தியாவைப் பொருத்தவரை மகாராஷ்டிராவில் உள்ள வகாதி என்ற கிராமத்தில் இந்திரனுக்கு கோயில் உள்ளது. சுற்றிலும் மரங்களால் சூழப்பட்டிருக்கிறது. இது ஒரு குன்றின் மேல் எழுப்பப்பட்டிருக்கிறது. அந்த கிராமத்தில் ஒரு காலத்தில் கடும் பஞ்சம் நிலவியது. அப்போது அவர்கள் மழைக்கு அதிபதியான இந்திரனை மனமுருகி வழிபட்டனர். அதைத் தொடர்ந்து கனமழை பெய்து அந்த கிராமம் செழிக்கத் தொடங்கியது. இதனால் அந்த கிராம மக்கள் நன்றியோடு இந்திரனுக்கு கோயில் எழுப்பியிருக்கிறார்கள். ஆந்திரப் பிரதேசத்தில் ஸ்ரீகாகுளம் என்ற பகுதியில் அரசவல்லி எந்த இடத்தில் அமைந்திருக்கிறது சூரிய நாராயணர் கோயில். இங்கு சூரியனுக்கு ஒரு அழகிய சிலை உள்ளது. அருகிலுள்ள புஷ்கரிணி என்ற புனிதக் குளம் இந்திரன் தனது வஜ்ராயுதத்தால் உருவாக்கியது என்று கூறப்படுகிறது. இமாச்சல பிரதேசத்தில் ரேணுகா ஏரியின் கரையில் அமைந்துள்ள காயத்ரிதேவி கோயிலில் இந்திரனின் ஒரு சலவைக்கல் உருவம் காணப்படுகிறது.