சபரிமலை செல்லும் பக்தர்கள் பத்தனம் திட்டையில் தங்கலாம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19நவ 2021 07:11
சபரிமலை:சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக கேரள அரசு போக்குவரத்துக் கழகம் புது திட்டத்தை செயல்படுத்துகிறது. பத்தனம்திட்டை வழியாக வரும் பக்தர்கள் நான்கு மணி நேரம் அங்கு தங்கி விட்டு அதே டிக்கெட்டில் பயணம் செய்யலாம்.
கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களுககான புது திட்டத்தை, அந்த மாநில போக்குரவத்து கழகம் அறிவித்துள்ளது. இதன்படி கேரளாவின் பல பகுதிகளில் இருந்தும், தமிழகத்தில் தென்காசி, செங்கோட்டை போன்ற இடங்களில் இருந்தும் பம்பைக்கு இயக்கப்படும் கேரள அரசு பஸ்கள் பத்தனம்திட்டை வரை மட்டுமே இயக்கப்படும். பக்தர்கள் பம்பைக்கு டிக்கெட் எடுக்க வேண்டும். ஆனால் பத்தனம்திட்டையில் இறங்கி ஓய்வு எடுக்கலாம். ஓட்டல்களில் சென்று உணவு சாப்பிடலாம். நான்கு மணி நேரத்திற்குள் பத்தனம்திட்டையில் இருந்து பம்பைக்கு செல்லும் செயின் சர்வீஸ் பஸ்சில் ஏறி பம்பை செல்லலாம்.பத்தனம்திட்டையில் இருந்து புறப்படும் பஸ் ஓட்டல்களில் நிற்காது.
5 நிமிடத்துக்கு ஒரு பஸ் புறப்பட்டு செல்லும். இதற்காக 50 பஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. நவ., 22 சோதனை ஓட்டம் நடத்தப்படும்.பத்தனம்திட்டை நகராட்சியுடன் இணைந்து கழிவறை உள்ளிட்ட வசதிகளும், குடும்பஸ்ரீ அமைப்புடன் சேர்ந்து ஓட்டல்களும் திறக்கப்பட உள்ளன. நிலக்கல் மற்றும் பம்பையில் ஓட்டல்கள் குறைந்ததால் பக்தர்களுக்கு ஏற்பட்ட சிரமம் இதன் மூலம் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
பம்பையில் பார்க்கிங் அனுமதி இல்லை: கேரளாவில் நான்கு ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் பம்பை உருக்குலைந்தது. அதன் பின் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் வாகனங்கள் பம்பையில் பார்க்கிங் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை.இந்த ஆண்டும் அது தொடர்கிறது. டிரைவருடன் வரும் வாகனங்கள் பம்பை வந்து பக்தர்களை இறக்கி விட்டு நிலக்கல் சென்று பார்க்கிங் செய்ய வேண்டும். அதே நேரத்தில் டிரைவரும் சன்னிதானம் செல்வதாக இருந்தால் நிலக்கல்லில் வாகனத்தை பார்க்கிங் செய்து விட்டு பஸ்சில் பம்பை செல்ல வேண்டும்.