பதிவு செய்த நாள்
22
நவ
2021
06:11
சென்னை: பழமை வாய்ந்த பரங்கிமலை காசி விஸ்நாதர் கோவிலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பக்தர்கள், ஆன்மிக நல விரும்பிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை, பரங்கிமலையில் காசி விசாலாட்சி அம்பாள் சமேத காசி விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. பல நுாற்றாண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில் புராணப் பெருமை பெற்றது. இக்கோவிலில் மூலவர் காசி விஸ்வநாதர் கிழக்கு முகமாகவும், அவரின் இடபாகத்தில் விசாலாட்சி நின்ற கோலத்திலும் அருள்பாலிக்கின்றனர்.புராண காலத்தில் வாழ்ந்த பிருங்கி முனிவர் காசியில் இருந்து தென்திசை நாடுகளுக்கு புனிதப் பயணம் செய்யும் காலத்தில், இங்குள்ள மலையில் சில காலம் வாழ்ந்தார் என நம்பப்படுகிறது.
அவர் வாழ்ந்த மலை பிருங்கி மலை என அழைக்கப்பட்டது. தற்போது, அந்தப் பகுதி பரங்கிமலை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இக்கோவிலுக்கு, 700 ஆண்டுகளுக்கு முன்பே பரங்கிமலை சுற்று வட்டாரப் பகுதியில் ஏராளமான சொத்துக்கள் எழுதி வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான கல்வெட்டுக்களும் காணப்படுகின்றன. அதில், பெருமளவு ஆக்கிரமிப்பாளர்களால் கபளீகரம் செய்யப்பட்டு விட்டது. தற்போது, ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில், வடபழனி கோவில் நிர்வாகத்தின் உப கோவிலாக இக்கோவில் விளங்குகிறது.
இக்கோவிலின் வலது புறம், பால்வெல்ஸ் சாலையில், மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக சாலையில் இருந்து நில ஆர்ஜிதம் செய்ய உள்ளதாக கூறி, கோவில் வளாகத்தில் குறியிட்டு உள்ளனர். நெடுஞ்சாலைத்துறை 8 மீட்டர் துாரம் நில ஆர்ஜிதம் செய்ய உள்ளதால், கோவிலின் பழமையான மதில்சுவர், உட்பிரஹாரம் ஆகியவை பாதிக்கப்படும் என தெரியவருகிறது. இது பக்தர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து, ஆன்மிக நல விரும்பிகள் தரப்பில் கூறியதாவது: பரங்கிமலை காசி விஸ்வநாதர் கோவில் மிகவும் பழமையானது. புராண பெருமை பெற்றது. மெட்ரோ ரயில் திட்டத்தின் சாலை விரிவாக்கம் காரணமாக கோவில் மதில் சுவர், உள் பிரஹாரம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.ஆனால், மெட்ரோ ரயில்வே நிர்வாகமோ, கோவிலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என உறுதி அளித்தது. இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறையினர் 8 மீட்டர் துாரம் வரை சாலை விரிவாக்கம் செய்ய உள்ளதாக கூறி குறியிட்டு சென்றுள்ளனர்.
இத்திட்டத்திற்கு தேவையான நில ஆர்ஜிதம், சாலையின் எதிர் திசையில் உள்ள காலிமனையில் செய்வதாக கூறப்பட்டது. அனால், திடீரென இத்திட்டம் மாற்றப்பட்டு உள்ளது.கோவிலின் மதில்சுவர் கூட கட்டி சில நுாற்றாண்டுகள் மேல் ஆகியிருக்கும். எனவே, பழமை வாய்ந்த கோவிலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இது குறித்து ஹிந்து சமய அறநிலையத்துறை தனி கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு கூறினர்.