சோழர் கால நடுகல் திருப்பத்துாரில் கண்டெடுப்பு
பதிவு செய்த நாள்
22
ஜன 2026 10:01
திருப்பத்துார்: திருப்பத்துார், தனியார் கல்லுாரியின், தமிழ்த்துறை பேராசிரியர் மோகன் காந்தி, தலைமையிலான குழுவினர், திருப்பத்துார் மாவட்டம், புதுார் நாடு சித்துாரில், 1,000 ஆண்டு பழயைான சோழர் கால நடுகல் ஒன்றை கண் டெடுத்தனர். இது குறித்து, பேராசிரியர் மோகன் காந்தி கூறியதாவது: இந்த நடுகல்லில், புலியோடு இரு வீரர்கள் போரிடுவது போன்று, 4 அடி அகல பலகை கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. முதலாவது வீரன் வலது கையில், நீண்ட தண்டு போன்ற ஆயுதத்தையும், இடது கையை மேலே துாக்கியவாறு குறுவாள் ஒன்றையும் வைத்துள்ளான். இரண்டாவது வீரன், வலது கையில் கூர்மையான வாள் ஒன்றை வைத்துள்ளான். இடது கையில், கூர்மையான பெரிய வாள் ஒன்றை வைத்துள்ளான். அதை பெரிய புலியின் வாயில் குத்தியதில் அந்த வாள், புலியின் தலை பின்புறம் வந்துள்ளது. புலியின் உடல், கால், பகுதிகள் மண்ணில் புதைந்த நிலையில் உள்ளன. இந்த நடுகல்லை, அப்பகுதி மக்கள் தற்போது, ‘மக்கள் மூத்தவன் கல்’ என அழைத்து வழிபாடு நடத்துகின்றனர். இது கி.பி., 10ம் நுாற்றாண்டு சோழர் காலத்திய ‘புலிக்குத்திப்பட்டான்’ நடுகல். ஊரை காவல் புரியும், இரு வீரர்கள், புலியோடு சண்டையிட்டு, புலியை கொன்று, அந்த சண்டையிலேயே இருவரும் இறந்ததை குறிக்கும் விதமாக, நடுகல் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
|