பதிவு செய்த நாள்
23
நவ
2021
02:11
அவிநாசி: சேவூர் அருகே, கானுரில் உள்ள தர்காவில், மத நல்லிணக்கம் போற்றும் வகையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
அவிநாசி சேவூர் அருகே, கானூர் குளத்தை ஒட்டியவாறு தர்கா உள்ளது. இங்கு, இஸ்லாமிய முன்னோர், ஜீவ சமாதி அடைந்ததால், சக்தி வாய்ந்த இடமாக கருதப்படுகிறது. இப்பகுதியில் உள்ள மக்கள் மட்டுமின்றி, சுற்றுவட்டாரத்தில் உள்ள இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என, அனைத்து தரப்பு மக்களும் அங்கு சென்று, வழிபடுவது வழக்கம். கார்த்திகை தீப திருநாளின் போது ஒரு வாரத்துக்கு, அங்கு தீபம் ஏற்றப்படும் தர்கா ஹஜ்ரத், சம்சுதீன் கூறியதாவது; திருமணம், குழந்தை பாக்கியம், தொழில் விருத்தி என, எந்தவொரு வேண்டுதல் வைத்தாலும் நிறைவேறுவதால், ஜாதி, மதம், இனம் பார்க்காமல் அனைத்து தரப்பு மக்களும் இந்த தர்காவுக்கு வருகின்றனர். வழக்கமாக கார்த்திகை தீபத்தின் போது, இப்பகுதியில் உள்ள மக்கள், கார்த்திகை தீபம் ஏற்றுவது வழக்கம். மத நல்லிணக்கத்துக்கு சிறந்த உதாரணமாக, இந்த தர்கா விளங்குகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.