13ம் நுாற்றாண்டை சேர்ந்த நிலக்கொடை கல்வெட்டு கண்டுபிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24நவ 2021 01:11
பெருங்குடி : மதுரை பெருங்குடி கண்மாய் கரையில் 13ம் நுாற்றாண்டை சேர்ந்த நிலக்கொடை கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதில் விக்கிரம பாண்டியன் பேரரையான் என்ற சிற்றரசர் இப்பகுதியை ஆட்சி செய்தது தெரியவந்துள்ளது.
சரஸ்வதி நாராயணன் கல்லுாரி முதுகலை வரலாற்றுத்துறை மாணவர் சூரியபிரகாஷ் தெரிவித்த தகவலின்படி வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் முனீஸ்வரன், லட்சுமணமூர்த்தி, ஆதிபெருமாள்சாமி கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர். ஆலமரத்து விநாயகர் கோயில் அருகே குத்துக்கல் பாதி மண்ணில் புதைந்த நிலையில் கல்வெட்டு பொறிக்கப்பட்டிருந்தது. பேராசிரியர்கள் கூறியதாவது: மண்ணில் பாதி புதைந்த நிலையில் இருந்த 5 அடி உயர கல்துாணில் எட்டுக்கோணம், இரண்டு பட்டை வடிவத்தில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. துாண் மீதுள்ள பட்டையில் மூன்றுபக்கம் நில அளவை குறியீடுகள், மற்றொரு பக்கம் திருமாலின் வாமன அவதார குறியீடு, கோட்டோவியம் நிலத்தை வைணவக் கோயிலுக்கு நிலக்கொடையாக வழங்கியதை குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டில் கல்துாணின் கீழ் பட்டைபகுதியில் 12 வரிகள் உள்ளன. பல எழுத்துக்களில் தேய்மானம் ஏற்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கம் உதவியுடன் கல்வெட்டு படிக்கப்பட்டதில் இக்கல்வெட்டு நிலதானம் வழங்கியது, எழுதி கொடுத்தவர் பெயர், நிலத்தின் நான்கு எல்லைப் பகுதியை குறிப்பிடுகிறது. விக்கிரம பாண்டியன் பேரரையான் என்ற சிற்றரசர் இப்பகுதியை ஆட்சி செய்ததாகவும், அவரின் ஆட்சியில் நிலதானம் வழங்கியவரையும் ஆவணமாக எழுதிக் கொடுத்த குமராஜன் பெயரும் இறுதி வரியில் இருப்பதை அறிய முடிகிறது என்றனர்.