சிங்கவரம் ரங்கநாதர் கோவிலை பாதுகாக்க வேண்டும்: நீதிமன்ற வழிகாட்டுதல் கடைபிடிக்கப்படுமா ?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25நவ 2021 05:11
செஞ்சி:சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் உரிய முறைகளை பின்பற்றாமல் மலைப்பாதை அமைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோவிலில் சுற்று சுவர் இடிந்து விழுந்தது பக்தர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த சிங்கவரம் மலை மீது 6ம் நுாற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் கால ரங்கநாதர் குடைவரை கோவில் உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இக்கோவிலில் நடக்கும் வைகுண்டஏகாதசி விழாவுக்கு 25 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவர்.
முகூர்த்த நாட்களில் ஏராளமான திருமணங்கள் நடக்கிறது.இதனால், கோவிலின் மலை மீது செல்ல பாதை அமைக்க வேண்டும்என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து இந்து சமய அறநிலையத் துறையினர் 2017ல் மலைப்பாதை அமைக்க முடிவு செய்தனர்.அப்போது 555 மீட்டர் மலை பாதை அமைக்க 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப் பட்டது. இது போதுமானதாக இருக்காது என முடிவு செய்து, 1 கோடி ரூபாயில் திட்டம் தயாரித்து தமிழக அரசுக்குஅனுப்பினர்.ஒப்புதல் வருவதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதற்கிடையே 2018ல் கிராம மக்கள் தங்களின் சொந்தமுயற்சியில் மலைப்பாதைக்கான வேலைகளை துவக்கி செய்தனர்.அப்போது மலைப் பாதையை ஆகம விதிகளுக்கு முரணாகவும், கோவிலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலும் செய்வதாக செஞ்சி போலீசில் அகில இந்திய இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் செஞ்சிராஜா புகார் அளித்தார். இதற்கு பதில் அளித்த இந்து சமய அறநிலையத்துறையினர் மலை தங்களின் கட்டுப்பாட்டில் இல்லை. வருவாய்த் துறைக்கு சொந்தமானது என, பதில் அளித்தனர். இதன் பிறகு சில மாதங்கள் பணிகள் நிறுத்தப்பட்டன.வெடிபொருட்கள்மீண்டும் சில மாதங்களாக பணியை துவக்கி செய்து வந்தனர்.
இந்நிலையில் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர், மலைப்பாதை அமைக்க வெடிப்பொருட்கள் பயன்படுத்தப்படுவதால் கோவிலுக்குசேதம் ஏற்படும். கோவிலின் சுற்றுச் சுவர் பாதிக்கப்படும் என, சென்னைஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.நவ. 20ல் இம்மனுவை ஏற்று கொண்ட முதல் பெஞ்ச் நீதிபதிகள் துரைசாமி, நாராயண பிரசாத் ஆகியோர் தற்போதைய நிலை தொடரவும், சேதமடைந்த பகுதியை செப்பனிட தடையேதும் இல்லை என, உத்தரவிட்டனர்.நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு விசாரணையை டிச. 2ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். இந்நிலையில் நவ.19ல் பெய்த கனமழையின் போது கோவிலின் இரண்டு இடங்களில் மதில் சுவர் சரிந்து விழுந்தது.கொடி மரம் எதிரே பெரிய அளவில் மண் சரிவு ஏற்பட்டது.இதை தற்போது சீரமைத்து வருகின்றனர். நவ.21 செஞ்சியில் பேட்டியளித்த பா.ஜ., மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி 18ம் தேதி இரவு பாறைகளை வெடி வைத்து தகர்த்ததால் தான் சிங்கவரம் ரங்கநாதர் கோவில் சுற்று சுவர் இடிந்து விழுந்தது.அரசின் ஒப்புதல்இன்றி சாலை அமைக்கும் பணி அமைச்சர் மஸ்தான் தலையீட்டில் நடந்து வருகிறது. தி.மு.க., அரசு வேண்டும் என்றே கோவிலுக்கு சேதத்தை ஏற்படுத்துகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என,குற்றம் சாட்டியிருந்தார்.
ஆய்வு நடத்தப்படுமா ?: அரசியல் ரீதியான குற்றச்சாட்டுக்கள் ஒருபுறம் இருந்தாலும் இதுவரை நடந்துள்ள பணிகள் அரசின் எந்தத் துறையின்அனுமதியும் இல்லாமலேயே நடந்திருப்பது தவறான முன் உதாரணமாகி உள்ளது.எனவே இதுவரை நடந்துள்ள பணிகளால்கோவிலுக்கு எதேனும் பாதிப்புஏற்பட்டுள்ளதா என்பதை இந்திய தொல்லியல் துறையின் வல்லுநர் குழுவை கொண்டு தமிழக அரசு ஆய்வு செய்து கோவிலின் பாதுகாப்பைஉறுதி செய்ய வேண்டும். வரும் காலங்களில் தகுந்த வல்லுநர் குழுவின் ஆலோசனையின்படி மலைப்பாதையை அமைக்க வேண்டும். இது குறித்து அமைச்சர் மஸ்தான் கூறுகையில், அ.தி.மு.க., ஆட்சியில் எம்.எல்.ஏ.,வாக இருந்த போது வயதானவர்கள் கோவிலுக்கு போக மலைப்பாதை வேண்டும் என, கிராம மக்கள் கேட்டு கொண்டனர். இது குறித்து மூன்றுமுறை சட்டசபையில் பேசினேன். துணை மானிய கோரிக்கையின் போதும் துணை கேள்வி எழுப்பினேன். இப்போது அமைச்சரான பின், கோரிக்கையை நிறைவேற்ற நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது விதிமுறைகள் படியே நடக்கும் என்றார்.
பாதுகாப்பே முக்கியம்: ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் கூறுகையில், இந்த கோயிலுக்கு நான் வந்து பார்த்தபோது வெடிபொருட்கள் பயன்படுத்தப்படிருப்பது தெரியவந்தது. பழமையான கோயில் என்பதால் இதை பாதுகாக்க வழக்கு தொடர்ந்தேன். கோவிலில் வசதிகளை செய்வதை விட பாதுகாப்பு முக்கியமானது. எனவே நீதிமன்ற வழிகாட்டுதலின் படி பணிகளை அரசு செய்ய வேண்டும் என்றார்.