பதிவு செய்த நாள்
27
நவ
2021
05:11
சென்னை:ஹிந்து சமய அறநிலையத்துறை தணிக்கை பிரிவு, அந்த துறையில் இருந்து பிரிக்கப்பட்டு, தனித்துறையாக நிதித்துறையின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது. திருக்கோவில்கள் தணிக்கைக்கு என, ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் கட்டுப் பாட்டில், 1972ல் ஹிந்து சமய அறநிலையத்துறை தணிக்கை பிரிவு, உள்ளாட்சி நிதி தணிக்கை துறையில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்டது.இது, 19 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, நான்கு துணை தலைமை தணிக்கை அலுவலர் அலுவலகங்கள்; 15 மண்டல தணிக்கை அலுவலர் அலுவலகங்கள்; இவர்களுக்கு உதவியாக, 27 உதவி தணிக்கை அலுவலர் அலுவலகங்கள் என, செயல்பட்டு வருகின்றன.
இதில் உள்ள, 295 பணியிடங்களில், காலியிடங்கள் போக, 235 தணிக்கை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் கட்டுப்பாட்டில், தணிக்கை பிரிவுகள் செயல்படுவதால், தணிக்கை பணி தனித்துவமாக நடக்கவில்லை. எனவே, தணிக்கை பிரிவை, தனித்துறையாக பிரிக்க வேண்டும். இத்துறை நிதித்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஹிந்து சமய அறநிலையத்துறை ஆணையர், அரசுக்கு கடிதம் எழுதினார்.அதை பரிசீலனை செய்த அரசு, ஹிந்து சமய அறநிலைய துறைக்கான தணிக்கை பிரிவை, அத்துறை கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து, அறநிலையங்கள் தணிக்கை துறை ஒன்றை உருவாக்கி உள்ளது. இது, நிதித்துறை கட்டுப்பாட்டின் கீழ் தனித்துறையாக செயல்படும் என, அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.