பதிவு செய்த நாள்
01
டிச
2021
11:12
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், இரண்டு நாட்கள் நடக்கும் பகவான் யோகிராம் சுரத்குமார், 103வது ஜெயந்தி விழா நேற்று தொடங்கியது. உத்தரபிரதேசம், பலியா மாவட்டம், நர்தரா கிராமத்தில் பகவான் யோகிராம் சுரத்குமார் கடந்த, 1918 டிச.,1ல் பிறந்தார். இவர், 1959ல் திருவண்ணாமலை வந்து, பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்த நிலையில், 2001 பிப்., 20ல் முக்தி பெற்றார். பக்தர்கள் தொடர்ந்து ஆசிரமத்துக்கு வந்து, அவரது உருவ சிலை மற்றும் லிங்கத்தை வழிபட்டு ஆசி பெற்று செல்கின்றனர்.
நேற்று அவரது, 103வது ஜெயந்தி விழா தொடங்கியது. இதில், சுப்ரபாதம், அகவல், ஆரத்தி, நித்ய பூஜை, அகண்ட நாம ஜெபம், தாலாட்டு, பிரதான் மந்திர் பகுதியில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், ஆவாஹந்தி ஹோமம், ஆயுஷ் ஹோமம் நடந்தது. பின்னர், பகவான் யோகிராம் சுரத்குமார் சன்னதிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, வண்ண மலர்களால் அலங்கரித்து சிறப்பு பூஜை, அன்னதானம் நடந்தது. கொரோனாவால் இசை, கலைநிகழ்ச்சிகள் நடக்கவில்லை. இன்று (1ல்) ஏகாதச ருத்ர பாராயணம், மஹா அபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை, ஆசிரம நிர்வாகிகள், மாதேவகி, மதர்விஜயலட்சுமி, மதர் ராஜேஸ்வரி, டாக்டர் ராமநாதன், சுவாமிநாதன், குமரன், கணபதி சுப்ரமணியம் ஆகியோர் செய்திருந்தனர்.