பதிவு செய்த நாள்
01
டிச
2021
12:12
வேலுார்: ஜலகண்டேஸ்வரர் கோவிலில், மீண்டும் தண்ணீர் புகுந்ததால் பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. வேலுார், கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் கடந்த, 18ல் தண்ணீர் புகுந்ததால், பக்தர்கள் தடுமாறி சென்று சுவாமி தரிசனம் செய்தனர். கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவுபடி, கோவிலுக்குள் தேங்கிய தண்ணீர் மோட்டார் வைத்து வெளியேற்றப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, 10:00 முதல் நேற்று காலை, 8:00 மணி வரை மழை பெய்ததால், கோட்டை அகழியில் தண்ணீர் வரத்து அதிகரித்து காலை, 11:00 மணிக்கு கோவிலுக்குள் புகுந்தது. இதனால் அம்மன் கருவறையில் தண்ணீர் தேங்கியது. கோட்டை அகழியில் இருந்து, கோவிலுக்குள் வரும் சுரங்கப்பாதையில் தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டே உள்ளதால், இடுப்பளவு தண்ணீரில் சென்ற பக்தர்கள் பலர் வழுக்கி விழுந்தனர். கோவிலுக்குள் வரும் தண்ணீரும் மாசடைந்து வருகிறது. இது குறித்து, கோவில் மேலாளர் சுரேஷ் கூறுகையில்,‘‘தண்ணீர் வடியும் வரை, கோவிலுக்கு வர பக்தர்களுக்கு அனுமதி இல்லை. கோவில் பூட்டப்பட்டிருக்கும். கோவிலுக்கு வெளியே இருந்தபடி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம்,’’ என்றார்.