பதிவு செய்த நாள்
06
டிச
2021
01:12
அருப்புக்கோட்டை ; அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மீனாட்சி சொக்கநாதர் கோயிலுக்கு சொந்தமான தெப்பம் பாசி படர்ந்து அருவருப்பான நிலையில் ஆண்டுக்கணக்கில் காட்சியளிக்க,அமைச்சர் சாத்துார் ராமசந்திரன் முயற்சியால் தற்போது துாய்மை பணி நடந்து வருகிறது. அக்காலத்தில் நோய்களை தீர்க்கும் சூரிய புஷ்கரணி என அழைக்கப்பட்ட இந்த தெப்பம் ,காலப்போக்கில் பராமரிக்காமலும் தூர்வாராமலும் விட்டதால், மழை நீர் வரும் ஓடைகள் அடைப்பட்டு மழைநீரும் சேகரமாகாது,கழிவு நீர் தேங்கும் தெப்பமாக மாறியது.அப்பகுதியினர் பிளாஸ்டிக் கழிவு, குப்பையை கொட்டி மாசுப்படுத்த மாடுகள், பன்றிகள் மேயும் இடமாக மாறியது. தெப்பம் முழுவதும் பாசி படர்ந்து சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தியது. ஹிந்து அறநிலையத் துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்காது வேடிக்கை பார்த்தது. இதனால் தற்போது பெய்த கன மழையில் கூட தெப்பம் நிறையவில்லை.
தெப்பத்தை தூர்வார கோயிலின் செயல்அலுவலர் தேவி ,சமூக ஆர்வலர்கள் வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனிடம் கோரினர்.இதை தொடர்ந்து அமைச்சர் முயற்சியால் முன்னாள் நகராட்சி தலைவர் சிவப்பிரகாசம் தலைமையில் மாநில நெசவாளர் அணி செயலாளர் பழனிசாமி, ஆதிதிராவிடர் நலக்குழு தெற்கு மாவட்ட அமைப்பாளர் சோலையப்பன் , 27 வது வார்டு செயலாளர் நாகப்பன் ஆகியோர் தெப்பத்தை துார்வார நடவடிக்கை எடுத்தனர். குல்லுார்சந்தை அணையிலிருந்து 2 பரிசல்களுடன் தொழிலாளர்கள் தெப்பத்தில் சூழ்ந்த பாசியை அகற்றினர். இதோடு துார்வாரும் பணியும் நடந்தது. நேற்று மட்டும் ஒரு டன் குப்பை , பாசிகள் அகற்றப்பட்டன. முன்னாள் நகராட்சி தலைவர் சிவபிரகாசம் கூறியதாவது: இதன் பணிகள் இன்னும் 10 நாட்கள் நடக்கும். பணிகள் முழுமையாக முடிந்தவுடன் நீரை நிரப்பி மீன்கள் வளர்க்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது. தெப்பத்தை சுற்றிலும் கம்பி வேலிகள் அமைப்பதோடு, சுற்றி பேவர் பிளாக் பதிக்கப்பட்டு காலை , மாலை நேரங்களில் மக்கள் வாக்கிங் செல்வதற்கு ஏதுவாக நடைபாதை அமைக்கப்படும். தெப்பத்தை கண்காணிக்க சிசிடிவி கேமிராக்களும் பொருத்தப்படும், என்றார்.