பராமரிப்பில்லாத திருவாடானை கோயில்: பக்தர்கள் வேதனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06டிச 2021 01:12
திருவாடானை : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் சுற்று பிரகாரத்தில் செடிகள்வளர்ந்து புதர் மண்டி காணப்படுவதால் பக்தர்கள் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர்.
திருவாடானையில் ராமநாதபுரம் தேவஸ்தானத்திற்கு சொந்தமான ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் உள்ளது. இக் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரப்பாடல் பெற்ற தலமாகும். இங்குள்ள இறைவன் ஆதிரெத்தினேஸ்வரர் என்றும், இறைவி சினேகவல்லி என்றும் அழைக்கப்படுகின்றனர்.இங்கு வைகாசி விசாகம்மற்றும் ஆடிப்பூரத்திருவிழா சிறப்பாக நடைபெறும். பழமைவாய்ந்த இக்கோயில் ராஜகோபுரத்தில் ஆங்காங்கே செடிகள்வளர்ந்து சிலைகள் சேதமடைந்து வருகிறது.
கோயில் முன் மண்டப கூரையில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் மழை பெய்யும் போது தண்ணீர் இறங்குகிறது.கோயில் சுற்று பிரகாரத்தில் செடிகள் வளர்ந்துஉள்ளதால் பக்தர்கள் சுற்றி வர சிரமப்படுகின்றனர்.சிநேகவல்லி அம்மன் மண்டபத்தில் இக் கோயிலுக்கு சொந்தமான விளைநிலங்களிலிருந்து அறுவடை செய்யப்பட்ட நெல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. 2016ல் அமைக்கப்பட்ட உப்பு நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படாமல் காட்சி பொருளாக உள்ளது.முன்னாள் ஊராட்சி தலைவர் நாகரெத்தினம் கூறியதாவது: பழமை வாய்ந்த இக் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள், வாரச்சந்தை, கடை வாடகை மூலம் பலலட்சம் வருமானம் கிடைக்கிறது.
வருமானத்தை கோயில் வளர்ச்சி பணிகளுக்கு செலவு செய்யலாம். பழமை வாய்ந்த இக்கோயிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடம்பாகுடி தியாகராஜன் கூறியதாவது: கோயிலில் மூலிகைகளால் வரையப்பட்ட ஓவியங்கள் மறைந்து விட்டது. இங்கு பணியாற்றும் கோயில் ஊழியர்களுக்கு குறைவான சம்பளம் வழங்கப்படுகிறது. குறைவான சம்பளத்தில் பணிபுரியும் இவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். மழை நீர் ஒழுகுவதால் குவித்து வைக்கப்பட்ட நெல் வீணாகிறது என்றார். தேவஸ்தான செயல்அலுவலர் பாண்டியன் கூறியதாவது: சுற்று பிரகாரத்தில் வளர்ந்துள்ள செடிகளை ஊராட்சி சார்பில் 100 நாள் தொழிலாளர்கள் மூலம் அகற்றுவது வழக்கம். கடந்த ஒரு மாதமாக தொடர்மழையால் அகற்ற முடியவில்லை. இன்னும் சில தினங்களுக்குள் கோயில் சுத்தம் செய்யப்படும். காற்றோட்டத்திற்காக நெல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. பல ரகங்கள் இருப்பதால்நுகர்பொருள் வாணிப கிட்டங்கி அலுவலர்கள் வாங்க மறுக்கிறார்கள். தனியார் வியாபாரிகளிடம்விற்பனை செய்யமுடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இந்து அறநிலையத்துறையினரிடம் அனுமதி கேட்டுள்ளோம். கோபுரத்தில் செடிகளை அகற்ற தீயணைப்புதுறையினரிடமும், சங்கரன்கோயிலை சேர்ந்த சிலரிடம் கூறியுள்ளோம். அடுத்த வாரத்திற்குள் செடிகள் அகற்றப்படும், என்றார்.