பதிவு செய்த நாள்
06
டிச
2021
01:12
ஆண்டிபட்டி : கூடலுார் அருகே கி.பி., 17ம் நுாற்றாண்டு நடுகல்லை தேனி மாவட்ட வரலாற்று ஆய்வு மைய செயலாளர் பஞ்சராஜா கண்டுபிடித்தார்.
அவர் கூறுகையில், சேர, பாண்டிய நாட்டை இணைக்கும் பெருவழிப்பாதையாக கூடலுார் இருந்துள்ளது. இங்கு கி.பி.1702ம் ஆண்டு பூஞ்ஞாயிறு மன்னர் ரவிவர்மாவுக்கும், மதுரையை ஆண்ட ராணிமங்கம்மாளுக்கும் எல்லைப்போர் நடந்தது. இதில் வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவை போற்றிய நடுகல்கள் கிடைத்து வருகின்றன. துப்பாக்கி ஏந்திய நிலையில் கிடைத்த அரிய நடுகல்லை அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டும் என்றார்.
இந்த நடுகல்லை ஆய்வு செய்த பின் ஆண்டிபட்டி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கிருஷ்ணம்மாள் கூறியதாவது:நடுகல் என்பது போர் அல்லது சாதாரண நிலையில் இறந்தவர்களின் நினைவாக எடுப்பது. இது நினைவு சின்னம் மட்டுமின்றி வரலாறு, சமூகம், பண்பாடு முதலியவற்றை உள்ளடக்கியது. பொதுவாக நடுகல்லில் வீரனின் கையில் வில், வாள், வேல் போன்ற போர்க்கருவிகள் காணப்படும். இந்த நடுகல்லில் வீரன் ஒருவன் இடது கையில் துப்பாக்கி ஏந்தி நிற்பதோடு, அருகே மனைவி ஒரு காலை மடக்கி மற்றொரு காலை தொங்கவிட்டு பூச்செண்டுடன் அமர்ந்துள்ளார். இது புடைப்புச்சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.
இருவரது சிகை அலங்காரமும் பக்கவாட்டு கொண்டையுடன் நாயக்கர் கால பாணியை நினைவுபடுத்துவதாக உள்ளது. வீரனின் பாதம் வரையான ஆடை அலங்காரம், மனைவியின் ஆடை வடிவமைப்பு, நீள காதுகள் என சிற்பம் நேர்த்தியுடன் உள்ளது. துப்பாக்கியை பார்க்கும்போது போரில் வீரமரணமடைந்த நபரின் நினைவாகவும், கலை நயத்தின் அடிப்டையில் இது கி.பி.,17 ம் நுாற்றாண்டை சேர்ந்த நடுகல்லாகவும் இருக்கலாம். முன்காலத்திலேயே இங்கு துப்பாக்கி பயன்பாடு இருந்துள்ளதை குறிக்கும் நடுகல்லை மாவட்ட நிர்வாக அனுமதியுடன் ஆண்டிபட்டி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.