பதிவு செய்த நாள்
06
டிச
2021
02:12
ஈரோடு: சின்ன மாரியம்மன் கோவில் குண்டம் விழாவில், தடை மீறி பக்தர்கள் தீ மிதித்ததால், பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு, கருங்கல்பாளையத்தில், பிரசித்தி பெற்ற சின்னமாரியம்மன், பெரிய மாரியம்மன் கோவில்களின் நடப்பாண்டு குண்டம் விழா நேற்று காலை நடந்தது. கோவில் முறை பூசாரிகள் ராஜா, பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் குண்டம் இறங்கினர். இதையடுத்து தேர் வடம் பிடித்தல் நடந்தது. தேரில் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து, சில அடி தூரம் இழுக்கப்பட்டு, நிலை நிறுத்தப்பட்டது. திரளான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர். சின்ன மாரியம்மன், பெரிய மாரியம்மன் கோவில்களில் இன்றிரவு கரகம் எடுக்கும் நிகழ்ச்சி, நாளை பொங்கல் வைத்தல், மாவிளக்கு பூஜை நடக்கிறது.
முட்டி மோதிய மக்கள்: கொரோனா கட்டுப்பாட்டால் கடந்த ஆண்டைப் போல், நடப்பாண்டும் பக்தர்கள் தீ மிதிக்க தடை விதிக்கப்பட்டது. அதேசமயம் காலை, 6:00 மணி முதலே குண்டம் இறங்குவதை காண பக்தர்கள் கூட்டம் திரண்டு விட்டது. அமர்வதற்கு காலரி அமைக்கப்பட்டிருந்ததால், வசதியாக போய் விட்டது. காலை, ??:?? மணிக்கு, பூசாரிகள், நிர்வாகிகள் குண்டம் இறங்கினர். அதை தொடர்ந்து பக்தர்கள் கூட்டம், கூட்டமாக ஒரே நேரத்தில் முட்டி மோதிக்கொண்டு குண்டம் இறங்கினர். இதில் ஒருவர் குண்டத்தில் விழுந்து காயமடைந்தார். கருங்கல்பாளையம் போலீசார் உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யாததால், மாவட்ட நிர்வாகம் தடை விதித்தும், பக்தர்களும் தீ மிதிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.