சபரிமலை: சபரிமலை பாதையில் இறங்கிய காட்டுயானை வாகனங்களை தாக்குவதில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பத்தணம்திட்டை யிலிருந்து பம்பை செல்லும் ரோட்டில் செழிக்குழி அருகே நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில் ஒரு காட்டு யானை திடீரென ரோட்டில் வந்து நின்றது. நிலக்கல்லில் இருந்து பம்பை சென்றுகொண்டிருந்த வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. அந்த நேரத்தில் பம்பைக்கு சரக்குகளை ஏற்றிச் சென்ற மினி லாரி யானையின் அருகே சென்று விட்டது. பின்னால் வேறு வாகனங்கள் நின்றதால் லாரியை பின்னால் எடுக்க முடியவில்லை. டிரைவர் லாரியில் இருந்து இறங்கி ஓடினார். லாரியில் இருந்த பொருட்களை யானை தூக்கி வீசியது. பின்னால் வந்த வாகனங்களில் இருந்த பக்தர்கள் பயத்துடன் அமர்ந்திருந்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை ஊழியர்கள் வெடி வெடித்து யானையை காட்டுக்குள் அனுப்பினர். பின்னர் போக்குவரத்து தொடங்கியது. இதனால் டூவீலர்களில் இரவு பயணத்தை தவிர்க்குமாறு வனத்துறை மற்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.