பதிவு செய்த நாள்
07
டிச
2021
04:12
பல்லடம்: கோவில்களில் அறங்காவலர் குழுவை விரைந்து அமைத்து, திருப்பணிகள் நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகம் முழுவதும், ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்டு, 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. அறங்காவலர் குழுவின் கட்டுப்பாட்டில் கோவில்களின் செயல்பாடுகள் நடைமுறைப்படுத்துவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக, அறங்காவலர் குழு நியமிக்கப்படவில்லை. இதன் காரணமாக, செயல் அலுவலர்களே அறங்காவலர்களின் பணிகளை கவனித்து வருகின்றனர். இது குறித்து பக்தர்கள் கூறுகையில், அறங்காவலர் குழுவினர் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, கோவில்களின் அனைத்து செயல்பாடுகளையும் மேற்கொள்வது வழக்கம். கோவில் வரவு செலவு கணக்கை பதிவிடுவது, தணிக்கை அதிகாரிகளுக்கு பதில் அளிப்பது, கோவில் நிதியை பராமரிப்பதுடன், உபரி நிதியை பயன்படுத்துவது குறித்தும் அறங்காவலர்களே தீர்மானிக்கின்றனர். இவ்வாறு, கோவிலின் முழு பொறுப்பை நிர்வகித்துவரும் அறங்காவலர்கள் குழு, கடந்த சில ஆண்டுகளாக ஏற்படுத்தப்படவில்லை. அறங்காவலர் பணிகளை செயல் அலுவலர்களே செயல்படுத்தி வருகின்றனர். அரசு அலுவலர்களே, கோவிலின் முழு பொறுப்பையும் கவனிப்பது, மக்களிடம் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தும். மேலும், தமிழகம் முழுவதும் எண்ணற்ற கோவில்களில், திருப்பணி நடைபெறாமல் உள்ளன. ஐகோர்ட் உத்தரவை பின்பற்றி, அறங்காவலர் குழு அமைக்கவும், கோவில் திருப்பணிகள் விரைந்து நடக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.