கோவை: சென்னனுார் கரிவரதராஜ பெருமாள் கோவிலில், நேற்று சுவாமி சிலைகள் பாலாலயம் நடைபெற்றது.இக்கோவிலுக்கு 2005ம் ஆண்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்குப்பின்பு கும்பாபிஷேகம் மேற்கொள்வதற்கும், மராமத்துப்பணிகள் மேற்கொள்ளவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்கு, கோவில் சென்றதால் அனுமதி பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. கடந்த வாரம் இது குறித்து விவாதிக்க கூட்டம் நடந்தது. அதில், கோவில் கமிட்டி தலைவர் ராமச்சந்திரன், செயலாளர் துரைசாமி, பொருளாளர் ராசு ஆகியோர் தலைமையில் கிராமமக்கள் பங்கேற்றனர்.அதன் முடிவில் கோவிலில் பாலாலயம் செய்வது என்றும், விரைவாக மராமத்துப்பணிகளை நிறைவு செய்து, கும்பாபிஷேகம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று மாலை, கோவிலில் உள்ள சுவாமி விக்ரகங்கள் அனைத்தும் தானியாதி வாசம் செய்யப்பட்டது.இதற்கான பணிகளை, அப்பண்ணாசாரி சுவாமிகள் தலைமையிலான வைஷ்ணவ ஆச்சாரியர்கள் மேற்கொண்டனர். கோவில் செயல்அலுவலர் சந்திரன் உள்ளிட்ட கிராமமக்கள் பங்கேற்றனர்.