பதிவு செய்த நாள்
09
டிச
2021
10:12
கடலுார்: புதுப்பாளையம் ராஜகோபாலசாமி கோவில் ஸ்ம்ப்ரோக்ஷணம் 17 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கோலாகலமாக நடந்தது. கடலுார், புதுப்பாளையத்தில் செங்கமலவல்லி தாயார் சமேத ராஜகோபாலசாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இது, திவ்ய தேசங்களில் ஒன்றான
திருவந்திபுரம் தேவநாதசாமிக்கு அபிமான ஸ்தலமாகும். புரட்டாசி மாதத்தில் ஒருநாள் இங்குள்ள பெருமாள் திருப்பதி அலங்காரத்தில் அருள்பாலிப்பது சிறப்பு.
கோவிலில் மூலவர் ராஜகோபாலசாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக வீற்றிருக்கிறார். தாயார் செங்கமவல்லி தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். கோவில் உட்பிரகாரங்களில் ஆழ்வார்கள், நம்மாழ்வார்கள், உடையவர், ஆண்டாள், ராமர் சன்னதிகள் அமைந்துள்ளன. இக்கோவிலுக்கு கடந்த 2003ம் ஆண்டில் ஸம்ப்ரோக்ஷணம் நடந்தது. அதையடுத்து, கோவில் திருப்பணிகள் 10 ஆண்டுகளாக நடந்தது. கோவில் முழுவதும் கருங்கல் பாதிக்கப்பட்டு, சன்னதிகள் பஞ்சவர்ணம் பூசி புதுக்கப்பட்டுள்ளது. புதியதாக பிரதான ராஜகோபுரம், புனித தீர்த்தகுளம் புதுப்பிப்பு, புதிய கோசாலை, பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்ற துலாபாரம், தாயார் சன்னதியில் தொட்டில் என, அனைத்து திருப்பணி வேலைகளும் முடிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து, 17 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று ஸம்ப்ரோக்ஷணம் கோலாகலமாக நடந்தது.
கோவில் வளாகத்தில் 21 யாக குண்டங்கள் அமைத்து, கடந்த 7 ம் தேதி பூஜைகள் துவங்கியது. ஸம்ப்ரோக்ஷண தினமான இன்று காலை 5:30 மணிக்கு விஸ்வரூபம், புண்யாஹம், ஆராதனம், ேஹாமம், 7:15 மணிக்கு மகா பூர்ணாஹீதி, யாத்ரா தானம் நடந்தது. தொடர்ந்து, 8:05 மணிக்கு யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் கடங்கள் புறப்படாகி, கோவிலை வலம் வந்து கோபுரங்களை வந்தடைந்தன. சரியாக 8:30 மணிக்கு மூலவர் சன்னதி, விமான கலசம், ராஜகோபுரம் மற்றும் பரிவார மூர்த்திகள் சன்னதி கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு, ஸம்ப்ரோக்ஷணம் நடந்தது. கலசங்களில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாலை திருக்கல்யாண உற்சவம், இரவு 8:00 மணிக்கு புதிய இந்திர விமானத்தில் உபயநாச்சியார் சமேதமாக பெருமாள் கோவில் உள்பிரகார புறப்பாடு நடக்கிறது. கும்பாபிேஷக ஏற்பாடுகளை அய்யப்பன் எம்.எல்.ஏ., உபயதாரர் ஜி.ஆர்.கே., எஸ்டேட் துரைராஜ், அறநிலையத் துறை இணை ஆணையர் அசோக்குமார் உள்ளிட்டோர் முன்னின்று செய்தனர்.