வள்ளியூர்: ஏர்வாடி திருவளுதீஸ்வரர் கோயிலில் 300 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு பாலாலயம் நடந்தது.
ஏர்வாடி பெரியநாயகி அம்பாள் சமேத திருவளுதீஸ்வரர் கோயிலில் 300 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு நேற்று பாலாலயம் நடந்தது. ஏர்வாடி திருவளுதீஸ்வரர் கோயில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோவிலின் பரிவார மூர்த்திகளுக்கு பாலாலயம் செய்யப்பட்டு டி.வி.எஸ். அறக்கட்டளை மூலம் பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு கும்பாபிஷேகத்திற்கு தயாராக உள்ளது. இந்நிலையில் 2022 பிப்.6ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் டி.வி.எஸ். அறக்கட்டளை நிர்வாகிகள் பொதுமக்கள் முடிவு செய்தனர். நேற்று முன்தினம் மாலை விக்னேஸ்வர பூஜை முதல்கால பூஜையுடன் பாலாலய விழா துவங்கியது. 2ம் நாளான நேற்று காலை7 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம் பஞ்சகவ்வியம் 2ம் காலபூஜை, தீபாராதனை, பாலாலயம் நடந்தது. இக்கோயிலில் 40 ஆண்டுகளுக்கு மேலாக ஓடாமல் இருந்த தேர் தற்போது சுமார் ரூ.60 லட்சம் செலவில் அறநிலையத்துறை டி.வி.எஸ். அறக்கட்டளை மூலம் புதிய தேராக வெள்ளோட்டத்திற்கு தயாராக உள்ளது. வரும் 2022 வைகாசி மாதம் தேர் வெள்ளோட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அலுவலர் முருகன் டி.வி.எஸ். அறக்கட்டளையினர் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.