அன்னுார்: அன்னுாரில் 241 கோடி ரூபாய் மதிப்பிலான கூட்டு குடிநீர் திட்ட துவக்க விழாவை முன்னிட்டு தி.மு.க.,வினர் விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்தனர். கோவை மாவட்டம், அன்னுார் பகுதிகளுக்கு தினமும் 220 லட்சம் லிட்டர் குடிநீர் சப்ளை செய்யும் வகையில் 241 கோடி ரூபாயில் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் முடிவடைந்து உள்ளன. சிறுமுகை அருகே பவானி ஆற்றில் தண்ணீர் எடுக்கப்பட்டு அன்னுாரில் ஒரு கோடி லிட்டர் கொள்ளளவு கொண்ட சுத்திகரிப்பு நிலையத்தில் நிரப்பப்பட்டு குடிநீர் சப்ளை செய்யப்பட உள்ளது. இந்த திட்டத்தை சென்னையில் முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக நேற்று திறந்து வைத்தார். இதையடுத்து அன்னுார் பாதவிநாயகர் கோவிலில் தி.மு.க.,வினர் திரண்டனர். கூட்டு குடிநீர் திட்டத்தில் நிலமட்ட தொட்டிக்கு வந்த தண்ணீரை எடுத்து வந்து பாத விநாயகருக்கு ஊற்றினர். விநாயகருக்கு ரோஜா மாலை அணிவித்து, சிதறு தேங்காய் உடைத்து, வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு வழிபாடு செய்தனர். இதில் தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் நடராஜன், நகர பொறுப்பாளர் பரமேஸ்வரன் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.