காரைக்குடி:தெய்வீக காசி ஒளிமிகு காசி என்ற திட்டத்தை டிச. 13ல் பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார், அதை நாடுமுழுவதும் 51 ஆயிரம் டிவிக்கள் மூலம் ஒளிபரப்ப உள்ளதாக எச்.ராஜா தெரிவித்தார். காரைக்குடியில் அவர் கூறியதாவது:2014 தேர்தலில் போட்டியிடும் போது, காசி நகரத்தை புனிதமிகு காசியாக மாற்றுவேன் என மோடி கூறினார். அதன்படி காசி நகர் முழுவதும் நவீன மயமாக்கப்பட்டுள்ளது. இதனை டிச., 13ல் பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். இந்த நிகழ்ச்சியை 51 ஆயிரம் எல்.இ.டி., டி.வி க்கள் மூலம் நாட்டு மக்கள் நேரடியாக பார்க்கும் விதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பா.ஜ., விவசாயிகளுக்காக பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. கிசான் சம்மன் நிதி நான்கு மாதத்திற்கு ஒரு முறை வழங்கப்படுகிறது. மத்திய அரசு இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் காசியில் டிச. 16, 17, 23 ஆகிய நாட்களில் தேசிய ஜனநாயக கூட்டணியில் விவசாய அமைச்சர்கள் விவசாய துறை பற்றி விவாதிக்கின்றனர். அதே நாளில் நாடு முழுவதும் ஒவ்வொரு ஒன்றியங்களிலும் விவசாயிகளின் கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று கட்சி முடிவு செய்துள்ளது. இதில் மத்திய அரசு இதுவரை விவசாயிகளுக்கு என்னவெல்லாம் செய்துள்ளது என்பது குறித்து விளக்கப்படுகிறது.2022 ஜன.12 ஆம் தேதி இளைஞர்கள் மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நம் நாட்டின் பண்பாடு, கலாச்சாரம், தொன்மை குறித்து நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இந்த நாட்டின் அடையாளமே ஆன்மிகம், என்றார்.