பதிவு செய்த நாள்
09
டிச
2021
04:12
ஆலாந்துறை : பூண்டி, வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலில், புதியதாக முடி காணிக்கை மண்டபம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலை ஒட்டியுள்ள மலைத்தொடரின், ஏழாவது மலையின் உச்சியில் சுயம்பு வடிவிலான சிவலிங்கம் உள்ளது. இத்தலம், தென்கயிலாயம் என்ற சிறப்பு பெற்றுள்ளது. இக்கோவிலில், ஆண்டு முழுவதும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டாலும், மலை ஏற, ஆண்டுதோறும், மார்ச் முதல் மே மாதம் வரை மட்டுமே பக்தர்கள் மலையேற வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர் அனுமதி வழங்குகின்றனர். இதனால், அச்சமயத்தில், இக்கோவிலுக்கு நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து, வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசித்து செல்வார்கள்.இக்கோவிலின் பின்புறம், பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தும் மண்டபம் உள்ளது.
விழாக்காலங்களில், லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து முடி காணிக்கை செலுத்தும் இந்த இடம், மிகவும் சிதிலமடைந்து உள்ளது. இதனால், புதிதாக முடி காணிக்கை செலுத்தும் மண்டபம் அமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், நேற்று, இந்து அறநிலையத்துறை செயற்பொறியாளர் மதிவாணன், கோட்டபொறியாளர் செங்கோடன் உள்ளிட்ட அதிகாரிகள் கோவில், மண்டபம், அலுவலக கட்டடங்களை ஆய்வு செய்தனர். அதன்பின், புதிய முடி காணிக்கை மண்டபம் அமைப்பதற்காக, அளவீடு செய்யப்பட்டது. புதிய முடி காணிக்கை மண்டபம் கட்ட, திட்டம் தயார் செய்து, அரசின் ஒப்புதலுக்கு விரைவில் அனுப்பப்படும் என, அறநிலைய துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.