சத்திரப்பட்டி: பழநி சத்திரப்பட்டி அருகே உள்ள போடுவார்பட்டி பழங்கால செல்லாண்டியம்மன் கோயில் பராமரிப்பின்றி சிதிலமடைந்துள்ளது.
பழநி தொப்பம்பட்டி ஒன்றியம் போடுவார்பட்டி ஊராட்சியில் ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள செல்லாண்டியம்மன் கோயில் கவனிப்பாரின்றி பல காலமாக உள்ளது. இதனால் கோயில் கோபுரம், சுவர்கள் இடிந்து சிதிலமடைந்து உள்ளது. அங்குள்ள சிலைகளும் பராமரிப்பு இன்றி உள்ளது. அப்பகுதிக்கு செல்ல சரியான பாதை, கோயிலுக்கு மின்வசதி இல்லாததால் பகல் நேரங்களில் சிலர் வந்து வழிபட்டு செல்கின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில் இக் கோயிலைப் பராமரிக்கவும் சரிசெய்யவும், தொல்லியல் துறை, ஹிந்து அறநிலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இக்கோயிலில் சீரமைத்து ஒரு கால பூஜைக்கு நடவடிக்கை எடுக்கப்படும்." என்றனர். இதுகுறித்து போடுவார்பட்டி ராமசாமி கூறுகையில், "செல்லாண்டியம்மன் கோவிலில் சிறுவயதில் மிகவும் பிரசித்திப் பெற்ற கோயிலாகும். இதில் 7 நாட்கள் மாசி மாதத்தில் திருவிழா கொண்டாடப்படும் அப்போது கரும்பு பந்தல் அமைத்து கோயில் திருவிழா கொண்டாடி வருவர், கீரனூர் அம்மன் கோயிலிலிருந்து திருவிழா நாட்களில் சப்பரம் கொண்டுவரப்பட்டு கோயிலில் வழிபாடு நடைபெறும். பல ஆண்டுகளாக இக்கோயில் பராமரிப்பு இல்லாமல் உள்ளதால் இக்கோயிலில் சுவர்கள் சிலைகள் சேதம் அடைந்து உள்ளது. சொந்தமான நிலங்களும் உள்ளதாக தெரியவருகிறது எனவே அதிகாரிகள் விரைந்து இக்கோயிலை சரி செய்ய வேண்டும்" என்றார்.