பதிவு செய்த நாள்
11
டிச
2021
12:12
திருச்செந்துார்: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் வசதிக்காக புதிய கட்டண தரிசனப் பாதை திறக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் இலவச பொது தரிசனம் மற்றும் ரூ. 20, ரூ. 100, ரூ. 250 கட்டணப் பாதையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதில் பொது மற்றும் ரூ. 20 கட்டண தரிசனப் பாதையானது கோயில் சண்முக விலாசம் மண்டபத்தின் கிழக்குப்பகுதியில் உள்ளது. ரூ. 100 மற்றும் ரூ. 250 கட்டணப் பாதை சண்முக விலாச மண்டபத்தின் மேற்குப்பகுதியில் கட்டண ரசீது வாங்கும் அறையுடன் உள்ளது. தற்போது கோயிலுக்கு வரும் அதிகப்படியான பக்தர்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு, இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் உத்தரவின் பேரில், ரூ. 100 மற்றும் ரூ. 250 கட்டண தரிசனப் பாதை கோயில் கவுன்டர் மடம் அருகில் இருந்து செயல்படுமாறு துவங்கப்பட்டுள்ளது. இதற்காக கவுண்டர் மடம் அருகில் கட்டண ரசீது வாங்கும் அறை அமைக்கப்பட்டு, அங்கிருந்து இரும்புகம்பிகளாலான பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய கட்டணப்பாதை திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது.
கோயில் இணை ஆணையர் குமரதுரை கட்டண பாதையை திறந்து வைத்து, பக்தர்களை அனுமதித்தார். நிகழ்ச்சியில், உதவி ஆணையர் வெங்கடேசன் உள்ளிட்ட கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.