பதிவு செய்த நாள்
14
டிச
2021
03:12
வாரணாசி: உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் புதுப்பிக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோவில் வளாகத்தை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் சக்தி மற்றும் பக்தியை எந்த அழிக்கும் சக்தியாலும் வெல்ல முடியாது. நாம் நம்மை எப்படி பார்க்கிறமோ, அப்படியே உலகமும் நம்மை பார்க்கும், என, குறிப்பிட்டார். உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகம் பல கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
புனித நீராடல்: கங்கை நதியில் இருந்து கோவில் வரையிலான பாதையை அகலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புதுப்பிக்கப்பட்ட வளாகம் மற்றும் கட்டடங்களை மோடி நேற்று திறந்து வைத்தார்.முன்னதாக லலிதா காட் பகுதியிலிருந்து கங்கை கரை வளாகத்துக்கு இரண்டு அடுக்கு படகில் பயணித்தார். அங்குள்ள கால பைரவர் கோவிலில் வழிபட்டார். பின் கங்கை நதிக்குச் சென்று நீராடினார். பூஜை செய்வதற்காக கங்கை நதியில் இருந்து நீரை சேகரித்தார். கோவிலில் பூஜைகள் செய்த அவர், அங்கு நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது:காசி என்ற இந்த புண்ணிய பூமி பல சரித்திரங்களை பார்த்துள்ளது. முகலாய மன்னர் அவுரங்கசீப் இந்தக் கோவிலை தரைமட்டமாக்கி மசூதி கட்ட நினைத்தார். அவரை ஒடுக்க சத்ரபதி சிவாஜி உருவானார்.முஸ்லிம் ஆக்கிரமிப்பாளர் சலார் மசூத் இந்த நகரை சூறையாட முயன்றார். ராஜா சுகல்தேவ் தோன்றி, அவரை அடிபணிய வைத்தார்.
ஆங்கிலேயர் ஆட்சியில் வாரன் ஹேஸ்டிங் அட்டூழியங்களில் ஈடுபட்டார். ஆனால் அவர் துரத்தி அடிக்கப்பட்டார்.இவ்வாறு கொடுங்கோலர்கள் இந்த புனித பூமியை அழிக்க முயன்றனர். அதனால் அவர்கள் வரலாற்றின் கறுப்பு பக்கத்தில் இடம்பெற்றுள்ளனர். அதே நேரத்தில் காசி நகரம் எப்போதும்போல் புதுப் பொலிவுடன் மிளிர்ந்து வருகிறது.பல ஆண்டுகள் அடிமை தனத்தில் இருந்ததால் அதன் தாக்கத்தால் தாழ்வு மனப்பான்மையுடன் இருந்தோம். அதில் இருந்து விடுபட்டு புதிய இந்தியாவை உருவாக்கும், வளமான எதிர்காலத்தை உருவாக்கும் சக்தியை, இந்த மண் நமக்கு அளித்துள்ளது.காசி விஸ்வநாதர் கோவிலின் இந்த விரிவாக்கம், பிரமாண்ட கட்டடங்களை அமைப்பது மட்டும் அல்ல. நம் நாட்டின் சனாதன கலாசாரத்தை, ஆன்மீகத் தேடலை, நம் பாரம்பரியத்தை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.ராமர் கோவில், காசி விஸ்வநாதர் கோவிலுக்கான புதிய விரிவாக்கப்பட்ட பாதை மட்டும் இந்தியாவால் மேற்கொள்ளப்படவில்லை.
இந்திய பாரம்பரியம்: கடலுக்கடியில் ஆயிரக்கணக்கான கி.மீ., துாரத்துக்கு இணைய வசதி அளிக்கும் பைபர் கேபிள் பதிக்கவும் செய்துள்ளோம். பல லட்சம் மக்களுக்கு வீடுகள் கட்டித் தருவதோடு, விண்வெளிக்கு வீரர்களையும் அனுப்பவும் தெரியும்.புதிய இந்தியாவில் பாரம்பரியத்துடன் வளர்ச்சிப் பணிகளும் உள்ளன. நம் கலாசாரத்தின் மீது மட்டுமல்ல, நம் திறன்களும் மீதும் நமக்கு பெருமையை ஏற்படுத்தி வருகிறது.முன்பு, 3,000 சதுர அடியாக இருந்த இந்த கோவில் வளாகம் தற்போது, ஐந்து லட்சம் சதுர அடியாக விரிந்துள்ளது. இது சாதாரணமான விஷயமல்ல. இந்த வளாகம் பழமையுடன், புதுமையையும் உள்ளடக்கியது. அனைவரும் இணைந்து செயல்பட்டால் எதுவும் சாத்தியம் என்பதை நிரூபிப்பதாக உள்ளது.இந்தியாவின் சக்தி மற்றும் பக்தியை எந்த அழிக்கும் சக்தியாலும் வெல்ல முடியாது. நாம் நம்மை எப்படி பார்க்கிறோமோ, அப்படி இந்த உலகம் நம்மை பார்க்கும்.இவ்வாறு அவர் பேசினார்.உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பா.ஜ., தலைவர் நட்டா, பல ஹிந்து மடாதிபதிகள், ஜீயர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
மூன்று உறுதிமொழிகள்: தன் பேச்சின்போது, மூன்று உறுதிமொழிகளை ஏற்க வேண்டும், என, பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.அவர் கூறியதாவது:மூன்று உறுதிமொழிகளை ஏற்கும்படி உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். இது உங்கள் நலனுக்காக மட்டுமல்ல, நாட்டின் ஒட்டு மொத்த நலனுக்காக ஏற்க வேண்டும்.தூய்மை, புதுமை மற்றும் சுயசார்பு இந்தியா ஆகியவையே உங்களிடம் நான் கேட்டும் உறுதிமொழிகள். தூய்மை என்பது நம் வாழ்க்கை முறையாக, ஒழுக்கமாக இருக்க வேண்டும். நாம் எவ்வளவு சாதித்தாலும், அனைவரும் இணைந்து சுயசார்பு நிலையை எட்டாவிட்டால் அதன் பலனை முழுமையாக அடைய முடியாது.சேவை மற்றும் கடமையின் மூலம் இந்தியாவுக்கு பிரகாசமான எதிர்காலத்தை நாம் அனைவரும் இணைந்து உருவாக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
நனவான பாரதி கனவு!: நம் நாட்டில் செய்ய முடியாதது என்பது எதுவுமே இல்லை. அயோத்தியை நாட்டின் முக்கிய நகரங்களுடன் இணைக்கும் வகையில் நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. கேரளாவின் குருவாயூர் கோவில், தமிழகத்தின் காஞ்சிபுரம், வேளாங்கண்ணி ஆகிய தலங்கள் சாலை மார்க்கமாக இணைக்கப்பட்டுள்ளன, என பிரதமர் கூறினார். காசி நகர் புலவர் பேசும் உரைதனை காஞ்சி நகரில் கேட்க கருவி செய்வோம் என, மகாகவி பாரதியார் கண்ட கனவு நனவாகியுள்ளது என்றும் பெருமிதம் தெரிவித்தார்.பாரதியார் கவிதையை தமிழில் கூறிய பிரதமர் மோடி, பின் அதன் அர்த்தத்தை ஹிந்தியில் விளக்கினார்.
பாரத மாதா சிலை: கங்கையில் இருந்து விஸ்வநாதர் கோவிலுக்கு செல்லும் பாதை விரிவு படுத்தப்பட்டுள்ளது. இதற்கு தற்போது காசி விஸ்வநாதர் தாம் என, பெயரிடப்பட்டுள்ளது.இந்த பாதையில் இந்திய வரைபடத்தின் பின்னணியில் பாரத மாதாவின் சிலை வைக்கப்பட்டுள்ளது. மேலும் 1780ல் இந்தக் கோவில் இடிக்கப்பட்ட நிலையில், அதை புதிதாக நிர்மானித்த மகாராணி அகல்யாபாய் ஹோல்கரின் சிலையும் வைக்கப்பட்டுள்ளது.ஆதி சங்கரரின் சிலையும் இந்தப் பாதையில் இடம்பெற்றுள்ளது. இதைத் தவிர பக்தர்களுக்கு பல்வேறு வசதிகள் அளிக்கும் வகையிலான கட்டடங்கள், நுாலகம் என புதிதாக 23 கட்டடங்களையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
ஹரஹர மகாதேவ் கோஷம்: புதுப்பிக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோவில் வளாக துவக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்த பிரதமர் நரேந்திர மோடியை, அவரது தொகுதி மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றனர். அவரது கார் வாரணாசி சாலைகளில் சென்றபோது மலர்களை தூவி வரவேற்றனர். மேலும், ஹர ஹர மகாதேவ் என, மக்கள் கோஷமிட்டனர்.
துவக்க விழா நிகழ்ச்சியில் தன் பேச்சின்போது பலமுறை, ஹர ஹர மகாதேவ் என, மோடி கோஷமிட்டார். கோவில் வளாகம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. பல இடங்களில் பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பிரமாண்ட பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.மக்கள் கூட்டத்தின் இடையே கால பைரவர் கோவிலுக்கு மோடி சென்றபோது, வழியில் ஒருவர், தலைப்பாகை ஒன்றை மோடியை நோக்கி காட்டினார். காரை நிறுத்தி அதை மோடி பெற்றுக் கொண்டார்.
கங்கை படித்துறையில் ஆரத்தி: புனித நதியான கங்கையை வழிபடும் வகையில், கங்கை நதியை ஒட்டியுள்ள படித்துறையில் பிரதமர் நரேந்திர மோடி, கங்கை ஆரத்தி வழிபாட்டில் பங்கேற்றார். அப்போது பா.ஜ.,வைச் சேர்ந்த 12 மாநில முதல்வர்கள், மூன்று துணை முதல்வர்கள், அவர்களது குடும்பத்தாரும் பங்கேற்றனர்.அதைத் தொடர்ந்து சுவாமி விவேகானந்தர் சொகுசு கப்பல் வாயிலாக மற்ற படித் துறைகளில் நடக்கும் ஆரத்தி நிகழ்ச்சியை அவர் பார்வையிட்டார். பா.ஜ., முதல்வர்கள், துணை முதல்வர்களும் அவருடன் படகில் பயணம் செய்தனர்.காசியில் கங்கை ஆரத்தி நிகழ்ச்சியில் பங்கேற்பது எப்போதும் மன அமைதியையும், புதிய சக்தியையும் தரும். காசி தொடர்பான நீண்டகால கனவு திட்டம் நினைவான முழு மனதிருப்தியுடன், கங்கை தாய்க்கு அவர் அளித்து வரும் அளப்பரியா கொடைக்கு நன்றி தெரிவித்தேன் என, சமூக வலை தளத்தில் பதிவிட்டுள்ள செய்தியில் மோடி குறிப்பிட்டுள்ளார்.
தொழிலாளர்களுக்கு மரியாதை: கோவில் வளாக கட்டுமானப் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். மேலும், கட்டுமானத் தொழிலாளர்கள் மீது, மலர்களை தூவி நன்றியை வெளிப்படுத்தினார். அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின் தொழிலாளர்களுடன் அமர்ந்து மதிய உணவும் சாப்பிட்டார்.