பழநி: பழநி கோயில் நிர்வாகம் இந்திய அஞ்சல் துறை இணைந்து "பழநி பஞ்சாமிர்தம்" அஞ்சல் உறை வெளியிட்டனர். பழநி கோயில் நிர்வாகம் அஞ்சல் துறை இணைந்து ரூ. 250 க்கு அஞ்சலகங்களில் பழநி கோயில் பிரசாதங்களைப் பெற பதிவு செய்து கொள்ள முடியும். அதன் தொடர்ச்சியாக புவிசார் குறியீடுகள் பெற்ற திண்டுக்கல் பூட்டு, சிறுமலை வாழைப்பழம், விருப்பாச்சி மலைவாழைப்பழம், கொடைக்கானல் பூண்டு உள்ளிட்டவைகளுக்கு கடந்த அக்டோபர் மாதம் அஞ்சல் உறை வெளியிடப்பட்டது. அதன்படி புவிசார் குறியீடு பெற்ற பழநி பஞ்சாமிர்தத்திற்கான அஞ்சலக உரை நேற்று பழநி தேவஸ்தான அலுவலக கூட்ட அரங்கில் வெளியிடப்பட்டது. இதனை திண்டுக்கல் அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் சகாயராஜ் வழங்க பழநி கோயில் இணை ஆணையர் நடராஜன் பெற்றுக்கொண்டார். இதில் பழநி தலைமை அஞ்சலக தலைவர் திருமலைசாமி, வணிகப் பிரிவு அதிகாரி இளங்குமார், கனிஷ்கா உட்பட கோயில் மற்றும் தபால் துறை ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.