அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் கோவிலில் இன்று திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
அன்னூர் மன்னீஸ்வரர் கோயில் பழமையானது. இக்கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தேர்த்திருவிழா கடந்த 9ம் தேதி கிராம தேவதை வழிபாடுடன் துவங்கியது. கடந்த 10ம் தேதி கொடியேற்றம் நடந்தது. தினமும் மாலையில், அருந்தவச் செல்வி உடனமர் மன்னீஸ்வரர், சந்திர, சூரிய, பூத, புஷ்ப வாகனங்களில் உள்பிரகாரத்தில் உலா வந்து அருள் பாலித்தார். இன்று காலை 10:30 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் அருந்தவச் செல்வி உடனமர் மன்னீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இதையடுத்து யானை வாகனத்தில் மன்னீஸ்வரர் உள்பிரகாரத்தில் உலா வந்தார். நாளை காலை 7:45 மணிக்கு, சுவாமி தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. காலை 10:30 மணிக்கு தேரோட்டம் துவங்குகிறது. பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள், சிரவை ஆதீனம் குமரகுருபர அடிகள் உட்பட பலர் பங்கேற்கின்றனர். வரும் 17 ம் தேதி மாலையில் குதிரை வாகனத்தில் மன்னீஸ்வரர் உள்பிரகார உலா நடக்கிறது.