பதிவு செய்த நாள்
15
டிச
2021
05:12
அன்னூர்: மொண்டிபாளையம், வெங்கடேசப் பெருமாள் கோவிலில், நேற்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. கோவை மாவட்டம், அன்னூர் அடுத்து, மொண்டிபாளையம், வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் மேலைத் திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. இக்கோவிலில் நேற்று வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது. அதிகாலை 4:00 மணிக்கு, மூலவருக்கும் பின்னர் நாராயணமூர்த்திக்கும் திருமஞ்சனம் செய்யப்பட்டது. காலை 5:45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக வெங்கடேசபெருமாள் சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி கோஷம் எழுப்பி பெருமாளை வணங்கினர். பெருமாள், கோவிலின் உள் பிரகாரத்தில் உலா வந்து சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்களுக்கு அபிஷேகம் வழங்கப்பட்டது. புளியம்பட்டி, அன்னூர், அவிநாசி, கோவை பகுதியில் இருந்து வந்த திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசித்தனர்.