பழநி: பழநிக்கு தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் வரத் துவங்கியுள்ளனர். பழநியில் தைப்பூச பண்டிகை 2022ஆம் ஆண்டு ஜன. 18ல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் நேற்று மார்கழி மாதம் துவங்கியதை முன்னிட்டு பக்தர்கள் தைப்பூச பாதயாத்திரையாக வரத் துவங்கியுள்ளனர். கோவை, ஈரோடு, மதுரை, திருப்பூர், திருச்சி, உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து இனி வரும் நாட்களில் பாதயாத்திரை பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். தற்போது பாதயாத்திரை பக்தர்களுக்காக அமைக்கப்பட்ட பாதை சேதமடைந்து புதர் மண்டி உள்ளது. எனவே பக்தர்கள் ரோட்டில் நடந்து வரும் சூழல் உள்ளது. வரும் வழியில் மக்களுக்கான வசதிகள் தற்போது குறைவாக உள்ளது. ஆண்டுதோறும் பக்தர்களுக்கான வசதிகளை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தும். இந்த ஆண்டும் வழக்கம்போல பக்தர்களுக்கான தற்காலிக தங்கும் இடங்கள் கழிப்பறை, குளியலறை வசதிகள், தற்காலிக ட்யூப்லைட், இரவு நேரத்தில் நடந்து வர ஒளிரும் குச்சிகள், பட்டைகள் உள்ளிட்ட வசதிகளை விரைவில் ஏற்படுத்தி தர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.