பதிவு செய்த நாள்
20
டிச
2021
08:12
ராமநாதபுரம்: உத்தரகோசமங்கையில் நடந்த ஆருத்ரா தரிசன விழாவில், ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி சமேத மங்களேஸ்வரி அம்மன் கோவில் பழமையும், புரதான சிறப்பும் பெற்ற சிவாலயமாகும். இங்கு, ஆருத்ரா தரிசன விழா டிசம்பர் 11ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தனி சன்னிதிபிரசித்தி பெற்ற பச்சை மரகத நடராஜருக்கு தனி சன்னிதி உண்டு. ஆருத்ரா தரிசன விழாவான நேற்று காலை 8:00 மணிக்கு மரகத நடராஜருக்கு கடந்தாண்டு பூசப்பட்ட சந்தனம்படி களையப்பட்டு பால், பன்னீர், இளநீர், மஞ்சள் உள்ளிட்ட 32 வகையான அபிஷேக ஆராதனை நடந்தது.
பின், சந்தனாதி தைலம் பூசப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று, மரகத நடராஜரை தரிசனம் செய்தனர்.இரவு 10:00 மணிக்கு மேல் மஹா அபிஷேகம், விசேஷ அலங்கார தீபாராதனை நடந்தது. இன்று அதிகாலை 4:00 மணிக்கு அருணோதய காலத்தில், பச்சை மரகத நடராஜருக்கு புதிய சந்தன காப்பு இடப்பட்டு, சர்வ மலர் அலங்காரம் செய்யப்பட்டது. பகல் 12:00 மணிக்கு மரகத நடராஜருக்கு விசேஷ தீபாராதனை நடந்த பின், நடை சாத்தப்படும். பிற நாட்களில் பச்சை மரகத லிங்கம், ஸ்படிக லிங்கத்திற்கு நாள்தோறும் நித்ய பூஜை, அபிஷேக ஆராதனை நடக்கும்.