பதிவு செய்த நாள்
20
டிச
2021
10:12
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோவிலில், ஆருத்ரா தரிசனம் கோலகலமாக கொண்டாடப்பட்டது.
தஞ்சாவூர் பெரிய கோவிலில், சிவகாமசுந்தரி சமேத நடராஜபெருமான், தனி சன்னதியில் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திர தினத்தன்று ஆண்டுதோறும் நடராஜருக்கு ஆருத்ரா தரிசனம் நடந்து வருகிறது. அதைபோல் இந்தாண்டு ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, ஐம்பொன்னாலான நடராஜபெருமானுக்கு நேற்று மாலை(19ம் தேதி) விபூதி, பால், தயிர், பழங்கள், மஞ்சள், திரவிய பொடி, சந்தனம் உள்ளிட்ட மங்கள பொருட்களால் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, கொரோனா விதிமுறையால், இன்று(20ம் தேதி) காலை சுவாமிக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்து மஹாதீபாரதனையும் காண்பிக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய, சிவகாமசுந்திரியுடன், நடராஜபொருமான் கோவிலில் உள் பிரகாரத்தில் வலம் வந்தனர். வழக்கமாக சிவகங்கை குளத்தில் நடைபெறும் தீர்த்தவாரியானது, கோவில் உள்பிரகாரத்தில் நடந்தது. பின்னர், மும்மாரி மழை பொழிந்து விளைச்சல் நல்ல முறையில் இருக்க வேண்டும் நெல்மணிகளை சுவாமி மீது துாவப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.