பதிவு செய்த நாள்
20
டிச
2021
01:12
திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை, தற்போது அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, இரண்டு ஆண்டுகளாக ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்தது. முடி காணிக்கைதற்போது தொற்று பாதிப்பு சரிந்து வருவதால், விரைவு தரிசனம், வி.ஐ.பி., பிரேக், சர்வ தரிசனம் உள்ளிட்டவற்றில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு சுவாமி தரிசனம் செய்கின்றனர். அதனால், திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது.
நேற்று முன்தினம், 36 ஆயிரத்து 315 பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தனர்; 14 ஆயிரத்து 168 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.விரைவு தரிசன டிக்கெட்டுகளின் முன்பதிவு போல, சர்வ தரிசன டோக்கன்களின் முன்பதிவையும், ஆன்லைன் வாயிலாக தேவஸ்தானம் வெளியிட்டு வருவதால், தரிசன அனுமதி உள்ளவர்கள், தங்களுடன் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ் அல்லது தரிசன நாளுக்கு, 72 மணிநேரத்திற்கு முன்பு எடுத்த கோவிட் பரிசோதனை நெகடிவ் சான்றிதழ் உள்ளிட்டவற்றை கட்டாயம் கொண்டு வரவேண்டும்.சான்றிதழ் இல்லாதவர்கள் திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும், திருப்பதியில் உள்ள விஷ்ணு நிவாசத்தில் வாடகை அறை முன்பதிவையும் தேவஸ்தானம் துவக்கி உள்ளது.
பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால், ஏழுமலையானுக்கு இரவு 11:30 மணிக்கு ஏகாந்த சேவை நடத்தி, 12:௦௦ மணிக்கு கோவில் நடை சாற்றப்படுகிறது.தரிசன அனுமதியுள்ள பக்தர்கள், காலை 6:௦௦ மணிக்கு பின் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாகவும், 24 மணி நேரமும் அலிபிரி நடைபாதை மார்க்கமாகவும் திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். திருமலை மலைப்பாதை காலை 3:௦௦ மணிக்கு திறக்கப்பட்டு இரவு 12:௦௦ மணிக்கு மூடப்படுகிறது.கோவிட் விதிமுறையாக, திருமலைக்கு வரும் பக்தர்கள் அனைவரும் முக கவசம், சானிடைசர் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் எடுத்து வர வேண்டும். 10 வயதிற்கு மேற்பட்ட சிறார்களும், 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களும் தரிசன டிக்கெட் இருந்தால், ஏழுமலையானை தரிசிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
மேலும், சமீபத்தில் பெய்த கன மழை காரணமாக, திருமலைக்கு வர இயலாத பக்தர்களுக்கும், தேவஸ்தானம் ஏழுமலையானை தரிசிக்கும் வாய்ப்பை வழங்கி உள்ளது.மழை பெய்த நாட்களில், திருமலைக்கு வர முடியாத பக்தர்கள், அதற்கென புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சாப்ட்வேரில், மீண்டும் அதே டிக்கெட்டை பயன்படுத்தி முன்பதிவு செய்து, ஆறு மாத காலத்திற்குள் ஏழுமலையானை தரிசனம் செய்து கொள்ளலாம்.இந்த வாய்ப்பு ஆண்டிற்கு ஒருமுறைமட்டுமே வழங்கப்படும். தரிசனம், வாடகை அறை குறித்து புகார் அளிக்க விரும்பும் பக்தர்கள் 1800 425 4141, 9399 399 399 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என, தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது.பவுர்ணமி கருட சேவைதிருமலையில் மாதந்தோறும் பவுர்ணமியை ஒட்டி தேவஸ்தானம் கருடசேவையை நடத்தி வருகிறது.
பிரம்மோற்சவத்தின் போது திருமலைக்கு வந்து கருட சேவையை காண முடியாத பக்தர்கள், பவுர்ணமியன்று நடக்கும் கருட சேவையில் பங்கு கொள்ளலாம். அதன்படி, நேற்று பவுர்ணமியை முன்னிட்டு, திருமலையில் கருட சேவை நடந்தது.ஏழுமலையானின் உற்சவமூர்த்தியான மலையப்ப சுவாமி கருட வாகனத்தில், மாடவீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இதில், திருமலை ஜீயர்கள், தேவஸ்தான அதிகாரிகள் உள்ளிட்டோரும், திரளான பக்தர்களும் திரளாக பங்கேற்றனர்.