ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் திருக்கைத்தல சேவை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20டிச 2021 05:12
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கதநாத சுவாமி கோயிலில் நடந்து வரும் திருவத்யயன உற்சவத்தின் (வைகுந்த ஏகாதசி) இராப்பத்து ஏழாம் நாளான இன்று திருக்கைத்தல உற்சவம் நடைபெற உள்ளது.
அப்போது உற்சவர் ஸ்ரீ நம்பெருமாளை அர்ச்சகர்கள் தங்கள் கைகளில் ஏந்தி, எதிரில் நிற்கும் பக்தர்களுக்கும், பராங்குச நாச்சியார் திருக்கோலத்தில் எழுந்தருளி காத்திருக்கும் நம்மாழ்வாருக்கும் நன்கு தெரியும் படி காட்டுவார்கள். அர்ச்சகர்களின் கைகளில் இருந்து உற்சவர் ஸ்ரீ நம்பெருமாள் சேவை சாதிப்பதால் இந்த நிகழ்ச்சிக்கு திருக்கைத்தல சேவை என்று பெயர்.
நாளை வேடுபறி உற்சவம் : வைகுந்த ஏகாதசியின் எட்டாம் திருநாளான நாளை (செவ்வாய் கிழமை); திருமங்கைமன்னன் வேடுபறி உற்சவம் நடைபெற உள்ளது. இதனால் நாளை பரமபதவாசல் திறப்பு கிடையாது. இந்த நிகழ்ச்சியொட்டி மாலை 5 மணிக்கு சந்தனு மண்டபத்திலிருந்து ஸ்ரீநம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு மாலை 5.30 மணி முதல் வையாளி வகையறா கண்டருள்கிறார். பின்னர் இரவு 7.30 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்திற்கு சென்றடைகிறார். அங்கு இரவு 8.15 மணிமுதல் இரவு 9.30 மணி வரை உபயகாரர் மரியாதையுடன் பொதுஜன சேவை நடைபெறுகிறது. இரவு 11.00 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் ஸ்ரீநம்பெருமாள் இரவு 12 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். வரும் டிசம்பர் 23-ம் தேதி தீர்த்தவாரியும், 24-ந் தேதி வைகுந்த ஏகாதசியின் மிக முக்கியமான நிகழ்ச்சியான நம்மாழ்வாhக்கு மோட்சம் தந்தருளும் வைபவமும் நடைபெற உள்ளது. பின் இயற்பா சாற்றுமுறையுடன் வைகுந்த ஏகாதசி திருவிழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் திரு.மாரிமுத்து, உதவி ஆணையர் திரு.கந்தசாமி மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.