பதிவு செய்த நாள்
21
டிச
2021
03:12
பல்லடம்: பல்லடம் வட்டார சிவன் கோவில்களில், தில்லை அம்பலத்தானுக்கு திருவாதிரை திருவிழா பக்தர்கள் பங்களிப்புடன் சிறப்பாக நடந்தது.
பல்லடம் அடுத்த பல்லவராயன்பாளையத்தில் உள்ள பரமசிவன் கோவிலில், 19ம் ஆண்டு ஆருத்ரா தரிசன விழா நடந்தது. பேரூர் அருள்நெறி மன்றத்தின் சார்பில் சாந்தலிங்கர் பங்கேற்று திருவாதிரை விழாவை நடத்திக் கொடுத்தார். காலை, 5.30 மணிக்கு வேள்வி வழிபாடுடன் விழா துவங்கியது. தொடர்ந்து, பால், இளநீர், சந்தனம், பன்னீர், மஞ்சள், விபூதி, தயிர், நெய் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் மகா அபிஷேகம் நடந்தது. திருக்கல்யாணம், திருவீதி உலா, விநாயகரை வலம் வருதல் உள்ளிட்ட நிகழ்வுகளையடுத்து, சிறப்பு அலங்காரத்தில், தம்பதி சமேதராக நடராஜ பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரதோஷ வழிபாட்டு குழு, காந்திஜி இளைஞர் நற்பணி மன்றம், சிவசக்தி கலைக்குழுவினர் பிளவை ஒருங்கிணைத்தனர். செம்மிபாளையம், அனுப்பட்டி ஸ்ரீவேணுகான கிருஷ்ண பெருமாள் கோவில் பஜனைக் குழுவினர் பக்தி இசை பாடினர். அனைவருக்கும் விழாக் குழுவின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. சுக்கம்பாளையம் சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமான் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடந்தது. 24 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, திருக்கல்யாண கோலத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். புதுமண, மற்றும் மூத்த தம்பதிகள் பங்கேற்று நடராஜப் பெருமானை வழிபட்டனர். கயிலாய இசை முழக்கம் வாத்தியங்களுடன், அம்மையப்பராக சிவபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல், பல்லடம் அருளானந்த ஈஸ்வரர், சித்தம்பலம் நவகிரக கோட்டை உள்ளிட்டவற்றிலும் ஆருத்ரா தரிசன விழா நடந்தது.