பதிவு செய்த நாள்
21
டிச
2021
04:12
தஞ்சாவூர் : ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, தஞ்சாவூர், கும்பகோணம் பகுதிகளில் உள்ள சிவாலயங்களில், நடராஜருக்கும், சிவகாமி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
மார்கழி மாதம், திருவாதிரை திருநாளில், தேவர்கள், திருக்கயிலாயத்தில், நடராஜப் பெருமானின் திருநடனத்தை காண விரும்பினர். அவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில், கயிலாயத்தில் ஆனந்த தாண்டவம் புரியும் கோலத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமான், ஒவ்வொரு சிவாலயத்திலும் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். ஆண்டுதோறும் மார்காழி மாதம் திருவாதிரை நாளில் ஊடல் உற்சவமாகவும், ஆருத்ரா தரிசனமாகவும் கொண்டாடப்படுகிறது.
அதன்படி, தஞ்சாவூர் பெரிய கோவிலில், நேற்று முன்தினம் இரவு நடராஜருக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட திரவிய பொருட்களால் அபிஷேகம் நடந்தது. நேற்று காலை, சுவாமிக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்து, மஹா தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. சிவகாமசுந்திரியுடன், நடராஜபெருமான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, கோவிலில் உள் பிரகாரத்தில் வலம் வந்தனர். பிறகு தீர்த்தவாரியும், நெல்மணிகள் துாவும் வைபவமும் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவைாறு பஞ்சநதீஸ்வரர் கோவிலில், ஆட்கொண்டேஸ்வரர் சுவாமிக்கு, நேற்று முன்தினம் இரவு, சிறப்பு அபிஷேகம் நடந்து. நேற்று காலை நடராஜப் பெருமானும், சிவகாமசுந்தரி அம்பாளும் சிறப்பு அலங்காரத்தில், ஆட்கொண்டேஸ்வரர் சன்னதிக்கு வந்தடைந்தனர். அங்கு, ஒரே நேரத்தில், மூன்று சுவாமிகளுக்கும் தீபாராதனை நடைபெற்றது. கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேஸ்வரர், நாகேஸ்வரர், சோமேஸ்வரர் உள்ளிட்ட சிவலாயங்களிலும், ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடந்தது.