மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் ஆருத்ரா தரிசனம் நேற்று நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருவெண்காடு கிராமத்தில் ஸ்ரீ பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. 3 தீர்த்தம், 3 மூர்த்திகள், 3 விருட்சங்களை கொண்ட தலமாகும். இங்கு நவகிரகங்களில் புதன் பகவானும், சிவபெருமானின் அம்சமான அகோர மூர்த்தியும் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். தேவாரப் பாடல் பெற்ற இத்தலம் ஆதிசிதம்பரம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு சுவேதகேது என்ற 8 வயது குழந்தைக்காக சிவபெருமான் ஒன்பது தாண்டவங்களை ஆடியுள்ளார். இத்தகைய சிறப்பு பெற்ற திருத்தலத்தில் திருவாதிரையை முன்னிட்டு ஆருத்திரா தரிசனம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு பள்ளயத்தில் சர்க்கரை பொங்கல், திருவாதிரை களி, வடை வைத்து படையலிட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. திருமண பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதுபோல குத்தாலம் தாலுக்கா கடலங்குடி சிவன் கோவிலில் திருவாதிரை முன்னிட்டு ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. அதனை முன்னிட்டு நடராஜ பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வைக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பெண்கள் நடராஜ பெருமானை தோளில் சுமந்து கோவிலை வலம் வந்தனர். கோனேரிராஜபுரம் உமாமகேஸ்வரர் கோயில் திருவாதிரை முன்னிட்டு நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தின் போது உலகிலேயே மிகப்பெரிய எட்டரை அடி உயரம் உள்ள நடராஜர் பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதுபோல மாவட்டம் முழுவதும் உள்ள ஏராளமான சிவன் கோவில்களில் நேற்று நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தின் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.