பதிவு செய்த நாள்
22
டிச
2021
12:12
அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசன விழாவில், பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர். திருவாதிரை நட்சத்திர நாளன்று, நடராஜப் பெருமானை தரிசித்தால் வேண்டுவன எல்லாம் கிடைக்கும் என்பது ஐதீகம். அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, நேற்றுமுன்தினம் அதிகாலை 4:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. காலை 4:30 மணிக்கு மன்னீஸ்வரருக்கு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. காலை 5:45 மணிக்கு நடராஜர் மற்றும் சிவகாமி அம்மனுக்கு அபிஷேகம் துவங்கியது.
தேன், சர்க்கரை, நெய், பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், கரும்புசாறு, வெட்டிவேர், விபூதி என 32 திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து மகாதீபாராதனை நடந்தது. பெண்களுக்கு திருமாங்கல்ய கயிறு வழங்கப்பட்டது. 2,000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது, நடராஜப்பெருமான் வீற்ற வாகனமும், சிவகாமியம்மன் வீற்ற வாகனமும், தர்மர் கோவில் வீதி, சத்தி ரோடு, மெயின் ரோடு வழியாக உலா வந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து மீண்டும் மதியம் கோவிலை அடைந்தன.