பதிவு செய்த நாள்
23
டிச
2021
04:12
உடுமலை: உலகத்தின் நெருக்கடியும், துன்பமும் நெடுங்காலம் நீடித்திருக்காது, என பிரபஞ்ச நல மகாதவ வேள்வி துவக்க விழாவில், குருமகான் பரஞ்ஜோதியார் பேசினார்.உடுமலை திருமூர்த்திமலை உலக சமாதான ஆலயத்தில், 32வது பிரபஞ்ச நல மகாதவ வேள்வி துவக்கம் மற்றும் சொர்ண பிரணவாலய திறப்பு விழா நடந்தது.விழாவில், சர்வசக்தி யாகத்துக்குப்பிறகு, சொர்ண பிரணவாலயத்தை உலக சமாதான அறக்கட்டளை அறங்காவலர் விநாயகம் திறந்து வைத்தார். திறப்பு விழாவிற்குப்பின், 32வது பிரபஞ்ச நல மகாதவ வேள்வி துவக்க விழா நடந்தது.
உலக சமாதான அறக்கட்டளையின் பொதுச்செயலர் சுந்தரராமன் வரவேற்றார். அறக்கட்டளை அறங்காவலர் விநாயகம் தலைமை வகித்தார்.பேராளம் வேதாத்திரிய மகரிஷி அமைதி மற்றும் ஆன்மிக ஆய்வு அறக்கட்டளை நிறுவனர் அழகர் இராமனுஜம், சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.தொடர்ந்து, குருமகான் பரஞ்ஜோதியார், 32வது பிரபஞ்ச நல மகாதவ வேள்வியை துவக்கினார். அப்போது, அவர் பேசியதாவது: கடந்த இரண்டு ஆண்டுகள் உலகத்தின் நெருக்கடி நேரமாக அமைந்திருந்தது. நடுப்பகலும், நடுநிசியும் நெடுநேரம் நீடித்திருப்பதில்லை. அதைப்போல உலகத்தின் நெருக்கடியும், துன்பமும் நெடுங்காலம் நிலைத்திருக்காது.மாறி வரும் சூழ்நிலையில் இருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ள தடுப்பூசியே சிறந்தது.மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும். குறிப்பாக, இமய மலையின் இருபுறம் வாழும் இந்திய மற்றும் சீன மக்கள் இடையே, நல்ல இணக்கமும் நல்ல உறவுகளும் மேம்பட்டு, உலகத்திற்கு நன்மையை செய்கின்ற சூழல் உருவாகட்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.மாலையில், பிரணவாலயத்திற்குள் அமைக்கப்பட்ட உயர்ஞான பீடத்தில், இயற்கையை பாதுகாக்கவும், மக்களின் மனங்களில் அமைதியும், சாந்தியும் ஏற்பட உலக சமாதான ஆலய தலைவர் குருமகான் பரஞ்ஜோதியார், 32வது பிரபஞ்ச நல மகாதவ வேள்வியை துவக்கினார்.