சபரிமலை: மகரவிளக்குக்கு பின்னர் மாளிகைப்புறம் மணிமண்டபத்தில் நடைபெறும் களம் எழுத்து க்கு (வண்ண கோலமிடுதல்) தேவையான பொடிகள் பந்தளம் அரண்மனையில் ஒப்படைக்கப்பட்டது.
சபரிமலையில் மகரஜோதிக்கு பின்னர் மாளிகைப்புறம் கோயிலின் பின்புறம் உள்ள மணி மண்டபத்தில் கோலமிடும் நிகழ்ச்சி நடைபெறும். ஜன.,14-ல் குழந்தை உருவில் ஐயப்பன், 15-ல் வில்லாளி வீரன், 16ல் ராஜகுமாரன், 17-ல் புலி வாகனன், 18ல் திருவாபரண அலங்காரத்தில் ஐயப்பன் படம் வர்ண கோலங்களாக வரையப்படும். இதற்கு ரசாயனம் கலந்த வண்ண பொடிகளுக்கு பதிலாக பச்சை நிறத்துக்கு வாகை இலைப்பொடி, கருப்புக்கு உமியில்இருந்து தயாரித்த பொடி, வெள்ளைக்கு அரிசி பொடி, சிவப்புக்கு மஞ்சள், சுண்ணாம்பு கலந்த பொடி, மஞ்சளுக்கு மஞ்சள் பொடிகள் பயன்படுத்தப்படும். இந்த பொடிகள் ராந்நி தோட்ட மண்காவு கோயிலில் தயாரிக்கப்பட்டு பந்தளம் அரண்மனையில் நிர்வாகக் குழு செயலாளர் நாராயண வர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இவை ஜன., 12-ம் தேதி புறப்படும் மூன்று திருவாபரண பேடகங்களில் ஒன்றில் வைக்கப்பட்டு சன்னிதானம் கொண்டு வரப்படும்.