சபரிமலையில் மண்டல பூஜை: மகரவிளக்கு பூஜைகளுக்காக டிச.,30ல் நடை திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26டிச 2021 02:12
சபரிமலை: சபரிமலையில் இன்று மதியம் மண்டல பூஜை நடைபெறுகிறது. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். மகரவிளக்கு கால பூஜைகளுக்காக டிச.,30 மாலை மீண்டும் நடை திறக்கப்படும். சபரிமலையில் கார்த்திகை முதல் தேதி தொடங்கிய மண்டல காலத்தின் நிறைவாக இன்று மதியம் 12:30 மணிக்கு மண்டல பூஜை நடைபெறுகிறது. சன்னதி முன்புறம் உள்ள மண்டபத்தில் சந்தனம் பூஜிக்கப்பட்டு தங்க குடத்தில் அடைக்கப்பட்டு மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி பவனியாக எடுத்து வருவார். தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்வார்.
பின்னர் மூலவருக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டல பூஜை நடைபெறும். மதியம் 1:30 மணிக்கு நடை அடைக்கப்படும்.மாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு தீபாராதனை, இரவு அத்தாழ பூஜை முடிந்து 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். இதைத்தொடர்ந்து 41 நாட்கள் நீண்டு நடந்த மண்டல காலம் நிறைவுபெறும்.நாளை முதல் சன்னிதானம், பம்பை, நிலக்கல்லில் துப்புரவு பணிகள் நடைபெறும். மகரவிளக்கு கால பூஜைகளுக்காக டிச.,30- மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்படும். அன்று பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மறுநாள் முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். டிச.,31 அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு 4:30 மணிக்கு நெய் அபிஷேகம் ஆரம்பமாகும். ஜன.,14-ம் தேதி மகரஜோதி தரிசனம் நடைபெறுகிறது.