புதுச்சேரி : கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, நேற்றிரவு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன.கிறிஸ்துமஸ் விழா இன்று(25ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, புதுச்சேரியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நேற்று நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. புதுச்சேரி ரயில் நிலையம் எதிரே உள்ள துாய இருதய ஆண்டவர் பசிலிக்கா அதிபர் குழந்தைசாமி தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
அப்போது இயேசு கிறிஸ்து பிறப்பதை குறிக்கும் வகையில் குழந்தை இயேசுவின் சொரூபம், அங்கு அமைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் குடிலில் வைக்கப்பட்டது.புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள ஜென்மராக்கினி மாதா தேவலாயத்தில் பங்குதந்தை அல்போன்ஸ் சந்தானம் தலைமையில் கிறிஸ்து பிறப்பு விழா திருப்பலி நடந்தது. புதுச்சேரி ஆட்டுப்பட்டி அந்தோணியார் ஆலயத்தில் பெத்தி செமினார் மேல்நிலைப்பள்ளி முதல்வர் பாஸ்கல் ராஜ் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.புதுச்சேரி அரசு பொது மருத்துவமனை அருகே உள்ள துாயயோவான் தேவாலயம், நெல்லித்தோப்பு புனித விண்ணேற்பு அன்னை ஆலயம், தட்டாஞ்சாவடி பாத்திமா தேவாலயம், ரெயின்போ நகர் புனித ஜான்மரி வியான்னி ஆலயம் உள்ளிட்ட புதுச்சேரியில் உள்ள அனைத்து தேவாலயங்களில் நேற்று நள்ளிரவு சிறப்பு திருப்பலியும், பிரார்த்தனைகளும் நடந்தன.வாழ்த்துகிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி புதுச்சேரி-கடலுார் உயர்மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி பீட்டர் அபீர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவரது வாழ்த்து செய்தி:எல்லோரையுயும் சகோதர சகோதரிகளாக ஏற்றுக்கொண்டு சமுதாயத்தில் இணக்கமான வாழ்வதற்கு கிறிஸ்துமஸ் பெருவிழா நம்மை அழைத்து செல்லும். அனைவருக்கும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு நல்வாழ்த்துகள். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.