பதிவு செய்த நாள்
25
டிச
2021
12:12
சென்னை: அர்ச்சகர், ஓதுவார், பிரபந்த விண்ணப்பர், வேதபாராயணர் மற்றும் இசை கற்போர் பயிற்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில் அர்ச்சகர், ஓதுவார், பிரபந்த விண்ணப்பர், வேதபாராயணர், இசை கற்போர் ஆகியோருக்கு, பயிற்சி காலத்தில் 1,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வந்தது. இத்தொகை, 3,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என சட்டசபையில் அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்.
அதன்படி, பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் வேதபாராயணர் பள்ளிகளில் படித்து வரும், 14 மாணவர்கள்; மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோவில் ஒதுவார் பயிற்சி பள்ளிகளில் படிக்கும், 24 மாணவர்கள். மேலும் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின், தவில், நாதஸ்வர பயிற்சி பள்ளிகளில் படிக்கும், 25 மாணவர்களின் ஊக்கத்தொகை உயர்த்தி வழங்கப்பட உள்ளது. உயர்த்தப்பட்ட உதவித் தொகையான, 3,000 ரூபாயை நேற்று முதல்வர்வழங்கி திட்டத்தை துவக்கி வைத்தார். அமைச்சர் சேகர்பாபு, தலைமை செயலர் இறையன்பு, அறநிலையத் துறை செயலர் சந்திரமோகன், ஆணையர் குமரகுருபரன் பங்கேற்றனர்.